திருப்பூரில் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு 'சீல்'
திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதிலும் பனியன் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. 200 பேருக்கு மேல் பணிபுரியும் பனியன் ஏற்றுமதி நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு சளி பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனையில் 3 பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் அந்த நிறுவனத்தை மூடி 'சீல்' வைக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
குளத்துபுதூரில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் 295 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில் 18 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. சிறுபூலுவப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் 367 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 33பேருக்கும், மங்கலம்ரோடு பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் 232 பேருக்கு சோதனைசெய்ததில் 8 பேருக்கும், ஆசர்நகரில் உள்ள நிறுவனத்தில் 150 பேருக்கு சோதனை செய்ததில் 19 பேருக்கும் கொரோனா இருந்தது.
மேலும், ஆண்டிபாளையத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் 400 பேருக்கு சோதனை மேற்கொண்டதில் 32 பேருக்கும் பல்லடம் ரோடு கோகுல கிருஷ்ணா நகரில் உள்ள பனியன் ஏற்றுமதி நிறுவனத்தில் 800 தொழிலாளர்களுக்கு சோதனை நடந்ததில் 23 பேருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து 6 பனியன் ஏற்றுமதி நிறுவனங்களையும் மாநகராட்சி அதிகாரிகள் மூடி 'சீல்' வைத்தனர். அந்த பகுதி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
மேலும் பனியன் ஏற்றுமதி நிறுவனம் அமைந்துள்ள சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் மருத்துவ முகாம் நடத்தப்பட்டு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu