அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் அத்திக்கடவு-அவிநாசி திட்டம்; அமைச்சர் சாமிநாதன் தகவல்
Tirupur News. Tirupur News Today- பெருமாநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த அத்திக்கடவு-அவிநாசி திட்ட ஆய்வுக்கூட்டத்தில், அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பேசினார்.
Tirupur News. Tirupur News Today- திருப்பூரை அடுத்துள்ள பெருமாநல்லூரில், ஒரு திருமண மண்டபத்தில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது,
அத்திக்கடவு-அவிநாசி திட்டமானது பவானி ஆற்றில் காளிங்கராயன் அணைக்கட்டின் கீழ்புறத்திலிருந்து உபரி நீரை நீரேற்று முறையில் நிலத்தடி குழாய் மூலம் கொண்டு வரப்படுகிறது. இந்த திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ரூ.1756.88 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் 99 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை மற்றும் ஆறுநீர் உந்து நிலையங்களுக்கான பவானி, நல்லக்கவுண்டன்பாளையம், திருவாச்சி, போலநாயக்கன்பாளையம், எம்மாம்பூண்டி, அன்னூர் கட்டுமானப்பணிகள் முடிவடைந்துள்ளது. எம்.எஸ்.குழாய் பதிக்கும் பணிகள் 267.5 கி.மீ. நீளத்திற்கு முடிவடைந்துள்ளது.மின்மாற்றிகள், வி.டி.பம்புகள், மின்மோட்டார்கள், சுவிட்ச் கியர் மற்றும் பேனல் போர்டு ஆகியவை அனைத்து நீர் உந்து நிலையங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் அமைக்கும் பணி மற்றும் பூமிக்கடியில் மின்சார தொடரமைப்புகள் பதிக்கும் பணி 100 சதவீதம் முடிவுற்றுள்ளது.
இத்திட்டமானது கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி முதல் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டு தற்போது வரை ஆறு நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதானக்குழாய்களுக்கு சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் நீரேற்று நிலையங்களின் இடையிலுள்ள கிளைக்குழாய்கள் மற்றும் 1045 குளம்,குட்டைகளில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. அனைத்து சோதனை ஓட்டப்பணிகள் முடிக்கப்பட்டு இத்திட்டமானது அடுத்த மாதம் (ஜூன் ) பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், திருப்பூர் மாவட்டத்தில் 428 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,151.71 ஏக்கர் விவசாய நிலங்களும், ஈரோடு மாவட்டத்தில் 359 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 8,767.69 ஏக்கர் விவசாய நிலங்களும் மற்றும் கோவை மாவட்டத்தில் 258 ஏரி, குட்டைகள் தண்ணீர் நிரப்பப்பட்டு 7,548.58 ஏக்கர் விவசாய நிலங்களும் பயன்பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ஊத்துக்குளி குளம், குன்னத்தூர் குளம், ஆதியூர் குளம், மேற்குபதி குளம், ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் கிரே நகர் நீரேற்று நிலையம் மற்றும் நம்பியூர் ஊராட்சி ஒன்றியம் எம்மாம்பூண்டி நீரேற்று நிலையங்களில் நீரேற்றம் செய்வதை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன். அத்திக்கடவு -அவிநாசி திட்டத்தின் கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், செயற்பொறியாளர்கள். மன்மதன், .நரேன்சி, உதவி செயற்பொறியாளர்கள் சங்கர், ஆனந்தி, வெங்கட விஜயகுமார், வெங்கடாஜலபதி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu