அடுத்த மாதம் தள்ளிப் போகிறதா அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்க விழா?

Tirupur News,Tirupur News Today- அத்திக்கடவு - அவிநாசி திட்டம் துவக்க விழா எப்போது? (மாதிரி படம்)
Tirupur News,Tirupur News Today -கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களை உள்ளடக்கி ரூ. 1,756 கோடி செலவில் அத்திக்கடவு - அவிநாசி நீர் செறிவூட்டும் திட்டப்பணி முடிந்து வெள்ளோட்டம் பார்க்கும் பணி நடந்து வருகிறது. வெள்ளோட்டத்தின் போது ஆங்காங்கே குழாய் உடைப்பு, நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினை கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்படுகின்றன.
இதற்கிடையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி திருப்பூர் மாவட்டத்தில் உள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆகியோர் அவ்வப்போது இப்பணிகளை கண்காணித்து வருகின்றனர். திட்ட துவக்க விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். இம்மாதம் திட்டத்தின் தொடக்க விழா நடக்கும் என அமைச்சர் மு.பெ. சாமிநாதன் கூறினார். ஆனால், வெள்ளோட்டம் பார்க்கும் பணி 50 சதவீதம்தான் முடிந்துள்ளது. அடுத்த மாத இறுதியில்தான் வெள்ளோட்டம் முடியும் என கூறப்படுகிறது.
அதேவேளையில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பருவமழை பெய்யும் என்ற நிலையில் பவானி ஆற்றில் பெருக்கெடுத்து வரும் தண்ணீர் காலிங்கராயன் அணையை தாண்டி உபரியாக வெளியேறும். அப்போது மட்டுமே, ஆறு நீரேற்றங்களுக்கும் தண்ணீரை பம்ப் செய்து முழுமையாக நீர் செறிவூட்டும் பணியை செய்ய முடியும். எனவே திட்ட துவக்க விழா என்பது இன்னும் ஓரிரு மாதங்கள் தள்ளிப்போகும் வாய்ப்புண்டு எனவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக்குழுவினர் கூறுகையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே திறப்பு விழா குறித்த அறிவிப்பை உள்ளூர் அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.ஆனால் வெள்ளோட்டம் பார்க்கும் பணி முழுமை பெறவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகளுடன் ஆலோசித்து துவக்க விழா குறித்த தேதியை அமைச்சர்கள் இறுதி செய்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும், என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu