திருப்பூரில் காய்கறிகளுக்குச் செயற்கை தட்டுப்பாடு; பொதுமக்கள் புகார்

திருப்பூரில் காய்கறிகளுக்குச் செயற்கை தட்டுப்பாடு; பொதுமக்கள் புகார்
X

Tirupur News- காய்கறி விற்பனையில் தொடரும் பிரச்னையில் அங்கிருந்த வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸ் அதிகாரிகள். 

Tirupur News- திருப்பூரில் காய்கறிகளுக்கு செயற்கை தட்டுப்பாடு ஏற்படுத்தி உள்ளதாக, பொதுமக்களிடையே புகார் எழுந்துள்ளது.

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் தெற்கு உழவர் சந்தையை விவசாயிகள் புறக்கணித்து வருவதாலும், விவசாயிகள் - சாலையோர வியாபாரிகள் இடையிலான பிரச்னை காரணமாகவும் காய்கறிகளுக்குச் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

திருப்பூர், பல்லடம் ரோடு, தென்னம்பாளையத்தில் தெற்கு உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். தினமும் 70 டன் காய்கறிகளை விற்பனை செய்கின்றனர்.

தென்னம்பாளையம் பகுதியில் ரோட்டின் இருபுறங்களில் அமைக்கப்படும் சாலையோர வியாபாரிகள் கடைகளால் விவசாயிகளுக்கு விற்பனை பாதிக்கப்பட்டு வருவதாக தொடர் குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதேசமயம், ''சந்தையில் இருந்து, 150 மீ., தள்ளி, பல்லடம் ரோட்டில் தான் கடை அமைக்கிறோம். எங்கள் வாழ்வாதாரத்துக்கும் வழி ஏற்படுத்த வேண்டும்,' என்பது சாலையோர வியாபாரிகளின் வாதமாக இருந்து வருகிறது.

காய்கறி விலை உயர்வு

கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் உழவர் சந்தைக்கு செல்லாமல் சாலையோர வியாபாரிகளுக்கு போட்டியாக பல்லடம் ரோட்டில் வியாபாரம் செய்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டது. முத்தரப்பு பேச்சுவார்த்தையிலும் முடிவு ஏற்படவில்லை.

உழவர் சந்தையில் நேற்று வரை காய்கறி விற்பனையில் இயல்புநிலை திரும்பவில்லை. விளைபொருட்களுக்கு செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது, சந்தை வரத்து அதிகமாக உள்ள நிலையில், பெரும்பாலான காய்கறிகள் விலை தன்னிச்சையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, நேற்று, தக்காளி, கத்தரி, அவரை, முருங்கை விலை கிலோவுக்கு பத்து ரூபாய் உயர்த்தப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

சந்தை முழுமையாக செயல்படும் போது, எந்தெந்த காய்கறிகள், எங்கெங்கு விற்கும் என்பது குறித்து தெரியும். வாங்கி செல்வதும் எளிதாகும். தற்போது, சந்தை மூடப்பட்டு, விவசாயிகள் கடை களும் ரோட்டுக்கு வந்துள்ளதால், எது, விவசாயிகள் கடை, எது வியாபாரிகள் கடை என்பது தெரிவதில்லை.

பல்லடம் ரோடு, சந்தைக்கு முன் இரு தரப்பினரும் கடை வைத்துள்ளனர். சிலரோ, போராட்டத்தால் பொருட்கள் எங்களுக்கு முழுமையாக வந்து சேரவில்லை என்கின்றனர். அதனால், விலை நிர்ணயமின்றி, தங்கள் வாய்க்கு வந்த விலையை சொல்லி பொருட்களை விற்று, லாபம் பார்க்கின்றனர். சரியான விலையை தெரிந்து கொள்ள முடியவில்லை. வழக்கம் போல் சந்தை செயல்பட்டால், காய்கறிகளை எளிதில், எதிர்பார்க்கும் விலையில் வாங்கிச் செல்ல முடியும்.

இவ்வாறு, பொதுமக்கள் கூறினர்.

காய்கறிகள் விற்பனையில் இப்படி வியாபாரிகளுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்பட்டுள்ள பிரச்னையால் பொதுமக்கள்தான் இப்போது பாதிக்கப்பட்டுள்ளனர்.

Tags

Next Story
புஞ்சைபுளியம்பட்டி சந்தையில் வசூல் வெள்ளம்: ரூ.1 கோடிக்கு கால்நடை விற்பனை!