திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரியில் நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம்

Tirupur News,Tirupur News Today- திருப்பூரில் உள்ள அரசு மருத்துவ கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு அங்கீகாரம் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் தாராபுரம் ரோட்டில் அரசு மருத்துவக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் செயல்பட தொடங்கியது. இளநிலை மருத்துவ படிப்புக்கு 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் சேர்ந்து படிக்கின்றனர். இந்த கல்லூரி வளாகத்திலேயே அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பிரமாண்டமாக கட்டப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி.) ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக்கல்லூரிகளில் ஆய்வு செய்து அடுத்த ஆண்டு மருத்துவப்படிப்புக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு மற்றும் புதிய கல்வி ஆண்டின் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை வழங்குவது வழக்கம்.
புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக்கல்லூரிகளில் முதல் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் அங்கீகாரம் புதுப்பிப்பு இருக்கும். அதன்பிறகு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கீகாரம் மற்றும் புதுப்பிப்பு வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய மருத்துவ ஆணையத்தை சேர்ந்த 5 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் கடந்த மாதம் 29-ம் தேதி வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அரசு மருத்துவக்கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்களின் எண்ணிக்கை, மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்படும் விதம், ஆய்வகம், மருத்துவ மாணவர்களுக்கான வசதிகள், விடுதி வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், அரசு மருத்துவமனையில் நோயாளிக–ளுக்கு சிகிச்சை அளிக்கும் முறைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தனர். குறிப்பாக அனைத்து மருத்துவ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயோமெட்ரிக் வருகை பதிவு, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தனர். தங்கள் தரப்பில் இருந்து அனைத்தையும் திருப்திகரமான முறையில் தேசிய மருத்துவ ஆணைய குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி டீன் முருகேசன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு 2023-24-ம் ஆண்டுக்கான 100 மருத்துவ இடங்கள் மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே கடந்த 2021-22-ம் ஆண்டு முதல் பேட்ஜ், 2022-23-ம் ஆண்டு 2-வது பேட்ஜ் என்ற நிலையில் வருகிற 2023-24-வது ஆண்டு 3-வது பேட்ஜ் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
அதுபோல் 2022-23-ம் ஆண்டு அங்கீகாரம் முதல் தடவை புதுப்பிக்கப்பட்டது என்றும், தற்போது 2-வது ஆண்டாக அங்கீகாரத்தை புதுப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரிக்கு இந்த ஆண்டுக்கான அங்கீகாரம் மற்றும் ஏற்கனவே படித்து வருபவர்களுக்கான அங்கீகாரம் புதுப்பிப்பு கிடைத்துள்ளதால் மருத்துவத்துறையினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu