அனுமந்தராயசாமி கோவில் தேரோட்டம்: எச்சில் இலை மீது உருண்ட பக்தர்கள்
பைல் படம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 500 ஆண்டுகள் பழமையான அனுமந்தராயசாமி கோவில் உள்ளது. பொதுவாக ராமர் கோவில்களில் மூலமூர்த்தியாக சீதா, ராமர் இருக்க உற்சவமூர்த்தியாக ஆஞ்சநேயர் இருப்பது வழக்கம். ஆனால் தாராபுரத்தில் 7 அடி உயரத்தில் மூலமூர்த்தியாக ஆஞ்சநேயர் வீற்றிருக்க உற்சவ மூர்த்திகளாக சீதா, ராமர் வீற்றிருப்பது தாராபுரம் ஆஞ்சநேயர் கோவிலின் தனி சிறப்பாகும்.
ஆஞ்சநேயர் வாயு என்ற காற்றின் வடிவில் இங்கு அருள்பாலிப்பதாக ஐதீகம். இதன் காரணமாக மூலஸ்தானத்தின் மேற்கூரையில் எப்போதும் காற்று உள்ளே நுழைந்து வெளியே செல்லும் வகையில் திறந்த நிலையிலேயே கோவில் இருப்பது இங்கு மட்டுமே. இக்கோவிலில் ஆண்டு தோறும் தேரோட்ட விழா நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேரோட்டத்தையொட்டி தாராபுரம் அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு பூர்வாதி புண்ணியங்கள் வந்து சேர, நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டி அங்கப்பிரதட்சணம் என்ற மடைபுரலுதல் விநோத நேர்த்திக்கடனை நிறைவேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி தேரோட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு கோவில் பிரகாரத்திற்குள் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீ ஆஞ்சநேயரும் பக்தர்களுடன் ஒன்றாக உடன் அமர்ந்து அன்னதான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு அருந்தியதாகவும், அவர் சாப்பிட்ட இலையின் மீது படுத்து உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்வது பூர்வ புண்ணிய நற்பலன்களை கொண்டு வந்து சேர்க்கும் என்ற ஐதீகத்தால் நேர்த்திக்கடன் செலுத்த விரும்பியவர்கள், பொதுமக்கள் அன்னதானம் சாப்பிட்ட எச்சில் இலைகள் மீது, கோவிந்தா, கோவிந்தா என பக்தி கோஷமிட்டு உருண்டு தங்களது வேண்டுதலை நிறைவேற்றினர்.
எச்சில் இலை மீது அங்கப்பிரதட்சணம் செய்து, துளசி மாலை சாத்தி ஆஞ்சநேயப்பெருமானை உள்ளம் உருக வேண்டிக்கொண்டால் திருமணத்தடை உள்ளவர்களுக்கு விரைவில் திருமணமாகும். தீராத உடல் பிணிகள் எதுவாக இருந்தாலும் குணமாவதுடன், வியாபார தடைகள், குடும்ப பிரிவினைகள் நீங்கி சுபிட்சம் அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu