அவிநாசியில் நாளை, ராசா எம்.பி.யைக் கண்டித்து அதிமுக ஆா்ப்பாட்டம்; எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு

Tirupur News- திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில், அவிநாசியில் நடக்கும் ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- ஆ.ராசா எம்.பி.யைக் கண்டித்து அவிநாசியில் அதிமுக சாா்பில் நாளை வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 9) நடைபெறும் ஆா்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி ஜெயராமன் எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.
எம்.ஜி.ஆா். குறித்து அவதூறாகப் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து அதிமுக சாா்பில் அவிநாசியில் நாளை (வெள்ளிக்கிழமை- ஆா்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த ஆா்ப்பாட்டம் தொடா்பாக திருப்பூா் மாநகா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஆலோசனைக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் பழனிசாமி தலைமை வகித்தாா்.
இதில், பங்கேற்ற பொள்ளாச்சி வி.ஜெயராமன் செய்தியாளா்களிடம் கூறியதாவது,
எம்.ஜி.ஆா். குறித்து அவதூறாகப் பேசிய நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசாவைக் கண்டித்து அவிநாசியில் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாளை, ( வெள்ளிக்கிழமை) ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆா்ப்பாட்டத்தில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்க உள்ளனா்.
இந்த நிலையில், அவிநாசியில் ஆா்ப்பாட்டம் என்று அறிவித்தவுடன் சனிக்கிழமை மின்தடைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை செயற்கையாக மின்தடை ஏற்படுத்த முயற்சிக்கின்றனா். அதேபோல, ஆா்ப்பாட்டத்துக்கு வரும் வாகனங்களையும் தடுத்து நிறுத்தி இடையூறை ஏற்படுத்த முயற்சிப்பதாக தகவல் வருகின்றன. ஆகவே, ஆா்ப்பாட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்தினால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ.1,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தற்போது நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைப்பது வெட்கக்கேடான விஷயமாகும், அதேபோன்று அதிமுக ஆட்சி காலத்தில் டவுன்ஹாலில் கட்டப்பட்டு வரும் வளாகத்திற்கு கருணாநிதி பெயா் சூட்ட போவதாக தகவல்கள் வருகின்றன. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் உள்ள தொழில்கள் அனைத்தும் நலிவடைந்து வருகிறது, ஆனால் அதை பொருட்படுத்தாமல் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொழிலை மேம்படுத்துவதாக்கூறி ஸ்பெயின் நாட்டுக்கு உல்லாச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா் என்றாா்.
இந்தக் கூட்டத்தில், முன்னாள் எம்.பி. சி.சிவசாமி, திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மாநில அம்மா பேரவை இணைச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சு.குணசேகரன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் என்.எஸ்.என்.நடராஜ், பகுதி செயலாளா்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், ஹரிஹரசுதன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu