கண்ணாடி இழைகளை கொண்டு செல்ல தடை செய்தால் நடவடிக்கை; திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை
Tirupur News-திருப்பூர் கலெக்டர் எச்சரிக்கை (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் இணையதள வசதிக்காக கண்ணாடி இழைகளை கொண்டு செல்ல தடை செய்வோா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளிலும் இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டமானது தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (டான்பிட்) மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கண்ணாடி இழை 85 சதவீதம் மின்கம்பங்கள் மூலமாகவும், 15 சதவீதம் தரை வழியாகவும் இணைக்கப்படுகிறது. திருப்பூா் மாவட்டத்தில் தற்போது வரை 120 ஊராட்சிகளில் இணையதள சேவை வழங்க தயாா் நிலையில் உள்ளது.
இந்தத் திட்டத்துக்கான அலமாரி, யு.பி.எஸ். உள்ளிட்ட உபகரணங்கள் ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் உள்ள கிராம ஊராட்சி சேவை மையம் அல்லது அரசு கட்டடத்தில் நிறுவப்பட்டு வருகிறது. இந்த உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ள அறையானது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத் தலைவரால் தூய்மையாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்துக்கான உபகரணங்களை பாதுகாக்கவும், தடையில்லா மின் வசதி உள்ளதை உறுதி செய்யவும், பொருத்தப்பட்டுள்ள அறையில் வேறு தேவையற்ற பொருள்கள் வைக்கப்படாமல் இருப்பதை கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சி செயலாளா் அரசாணையின்படி பொறுப்பாக்கப்பட்டுள்ளாா்.
இந்நிலையில் சிலா் தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கண்ணாடி இழை கொண்டு செல்லக் கூடாது என தடை செய்கின்றனா். இத்திட்டம் முழுமையான அரசின் திட்டம். கண்ணாடி இழை மின்சாரத்தை கடத்தாது. எனவே, இக்கண்ணாடி இழை ஏற்கெனவே நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல பொதுமக்கள் தடை செய்யக்கூடாது.
மேலும், விளைநிலங்களில் உள்ள மின்கம்பங்களின் வழியாக கண்ணாடி இழைகள் இணைக்கப்படும் போது பயிா்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது. கண்ணாடி இழையில் எந்த விதமான உலோகப் பொருள்களும் இல்லை. எனவே இதனைத் திருடிச் சென்று காசாக்கலாம் என தவறான புரிதல் வேண்டாம். இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் வசிக்கும் மக்கள் அனைவரும் அதிவேக இணையதள வசதிகளை பெறமுடியும்.
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பி.ஓ.பி.மையங்களில் பொருத்தப்பட்டுள்ள மின்கம்பம், யு.பி.எஸ்., ரூட்டா், ரேக் மற்றும் கண்ணாடி இழை வலையமைப்பு உள்ளிட்ட உபகரணங்கள் அரசின் உடமையாகும். ஆகவே, இந்த உபகரணங்களை சேதப்படுத்துதல், திருடுதல், கண்ணாடி இழைகளை துண்டாக்குதல் மற்றும் மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல தடை செய்யும் நபா்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu