திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று செயல்பட்ட 49 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று செயல்பட்ட 49 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
X

Tirupur News- குடியரசு தினத்தில் செயல்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை (மாதிரி படம்)

Tirupur News- திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று செயல்பட்ட 49 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, தொழிலாளர் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டத்தில் குடியரசு தினத்தில் விடுமுறை அளிக்காத 49 நிறுவனங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளா் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

அரசு விடுமுறை அளித்த தினங்களில் தொழில் நிறுவனங்கள் செயல்படக் கூடாது. அன்று கட்டாயம் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து தொழில் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட வேண்டும். பத்திரிகை நிறுவனங்கள் போன்ற அத்யாவசிய பணி செய்யும் விதிமுறைக்கு உட்பட்ட நிறுவனங்கள் கூட அன்று கட்டாயம் பணிசெய்யும் பட்சத்தில், முன்கூட்டியே தொழிலாளர் துறைக்கு முறைப்படி விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும். அந்த நாளில் பணி செய்யும் ஊழியர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்கப்பட வேண்டும். இது கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

ஆனால் பல நிறுவனங்கள், இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் அரசு விடுமுறை நாட்களான சுதந்திர தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை நாட்களில் கூட விடுமுறை அளிக்காமல் தொழிலாளர்கள் பணிசெய்யும் விதிமீறல்கள் நடக்கின்றன.

அதனால் அரசு விடுமுறை நாட்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள், திடீர் சோதனை நடத்தி இவ்வாறு விதிமீறி செயல்படும் நிறுவனங்கள் மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுத்து, அபராதமும் விதிக்கின்றனர்.

அதன்படி திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) செந்தில்குமரன் தலைமையிலான தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் திருப்பூா் மாநகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் குடியரசு தினமான (வெள்ளிக்கிழமை) ஆய்வு மேற்கொண்டனா்.

விடுமுறை தினத்தில் பணிக்கு அமா்த்திய தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் அல்லது ஊதியத்துடன் கூடிய மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இது தொடா்பாக தொழிலாளா்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளா்களுக்கு, உதவி ஆய்வாளா்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும் என்கிற சட்டவிதியின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், விடுமுறை நாளில் தொழிலாளா்களை பணிக்கு அமா்த்திய 41 கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடத்திய ஆய்வில் 31 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. 24 உணவு நிறுவனங்களில் ஆய்வு நடத்தியதில் 18 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. ஆகவே, விதிமீறல்களில் ஈடுபட்ட 49 நிறுவனங்களின் உரிமையாளா்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு: வயதான தம்பதி மீது மோட்டார் சைக்கிளில் மோதிய கூலி தொழிலாளி பலி