அலகுமலையில் சிலைகள் செய்யும் பணிகளில் வேகம்; விநாயகர் சதுர்த்திக்கு 5 ஆயிரம் சிலைகள் தயார்
Tirupur News,Tirupur News Today- அலகுமலையில் தயாரிக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள்
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள அலகுமலையில் விநாயகர் சதுர்த்திக்காக சிலைகள் செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், விநாயகர் சதுர்த்தியை இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, சிவசேனா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றன. அந்த வகையில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா இந்து எழுச்சி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, 3 தினங்கள் வரை பூஜைகள் நடத்தப்பட்டு, பொதுமக்கள் வழிபடுவர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்படும். விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். மூன்று நாட்களுக்கு பின்பு, சிலைகள் விசர்ஜன ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்டு, அருகில் உள்ள நீர்நிலைகளில், சிலைகள் விசர்ஜனம் செய்யப்படும்.
இந்த ஆண்டு ‘அன்னை தமிழை காக்க, ஆன்மிகத்தை வளர்ப்போம்’ என்ற கோஷத்துடன் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அதற்காக பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் மற்றும் விசர்ஜனம் நடைபெற உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி வரும் 18-ம் தேதி நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து விநாயகர் சிலைகள் செய்யும் பணி பொங்கலூரை அடுத்த அலகுமலையில் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த சிலைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 3 அடி முதல் 11 அடி வரை உள்ள விநாயகர் சிலைகள் செய்யும் பணி நடக்கிறது.
இதில் சிங்கத்தின் மேல் அமர்ந்த விநாயகர், பசு மாட்டின் மேல் அமர்ந்த விநாயகர், மயில் மற்றும் பறக்கும் ஆஞ்சநேயர் மேல் அமர்ந்துள்ள விநாயகர் உட்பட பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது. விநாயகர் சதுர்த்தி விழா நெருங்குவதை ஒட்டி, தயார் செய்யப்பட்ட சிலைகளுக்கு வண்ணம் தீட்டும் பணி இரவு பகலாக நடக்கிறது. இந்த பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவுற்று திருப்பூர், ஈரோடு, கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு இங்கிருந்து சிலைகள் எடுத்துச் செல்லப்பட உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள், தயார் செய்யப்பட்டு வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu