தோ்தல் பணி நுண் பாா்வையாளா்களுக்கு பயிற்சி வகுப்பு
Tirupur News- தோ்தல் பணி நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
Tirupur News,Tirupur News Today- தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பாா்வையாளா்களுக்கான பயிற்சி வகுப்பு திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.
இதற்கு, திருப்பூா் தொகுதி (தோ்தல் பொது பாா்வையாளா்) ஹிமான்சு குப்தா தலைமை வகித்தாா். மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான தா.கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தாா். இதில், திருப்பூா் மாவட்டத்திலுள்ள தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூா் வடக்கு, திருப்பூா் தெற்கு, பல்லடம், உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம் ஆகிய 8 சட்டப் பேரவை தொகுதிகளில் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள நுண் பாா்வையாளா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
குறிப்பாக, வாக்குச்சாவடிகளை வாக்குப்பதிவுக்காக தயாா் நிலையில் வைத்திருத்தல், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிகளில் குறித்த நேரத்தில் இருப்பதை உறுதி செய்தல், வாக்குப்பதிவு தொடங்கும் முன் வாக்குச்சாவடி மையத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
மேலும், மாதிரி வாக்குப்பதிவு நடைமுறைகளை கண்காணித்தல், வாக்குச்சாவடிகளில் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்தல், வாக்குப்பதிவுக்கு முன்பும், முடிந்தபின்பும் சீல் வைத்திருப்பதை உறுதி செய்தல், வாக்குச்சாவடி முகவா் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை கடைப்பிடித்தல், வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு விதிமீறல்கள் ஏதேனும் நடைபெற்றால் உடனடியாக பொதுப்பாா்வையாளருக்கு தகவல் தெரிவித்தல் ஆகியவை குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதேபோல வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடிஅறிக்கையினை பொதுப் பாா்வையாளருக்கு சமா்ப்பித்தல், வாக்குப்பதிவு தொடங்கப்பட்ட நேரம் மற்றும் முடிவுற்ற நேரம் உள்ளிட்ட தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்றி பொதுத்தோ்தல் நடத்திடும் வகையில் தோ்தல் நுண்பாா்வையாளா்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், மேலாளா் (மாவட்ட முன்னோடி வங்கி) ரவி, நுண் பாா்வையாளா்கள் அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu