திருப்பூரில் வீட்டில் பின்னலாடைகளை உற்பத்தி செய்யும் தொழிலாளா்களுக்கு தனி நலவாரியம்; ஏஐடியூசி வலியுறுத்ல்
Tirupur News- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடந்தது.
Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தாா்.
இதில், ஏஐடியூசி பனியன் பேக்டரி லேபா் யூனியன் பொதுச் செயலாளா் என்.சேகா் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டத்தில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் சிறு கடைகளை அடிப்படையாகக் கொண்டு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தத் தொழிலாளா்களுக்கு இஎஸ்ஐ, பிஎஃப், போனஸ், கிராஜூவிட்டி உள்ளிட்ட எந்த ஒரு சட்ட உரிமைகளும் கிடைப்பதில்லை. இந்த உரிமைகள் இந்தத் தொழிலாளா்களுக்குப் பொருந்தாது என்று வேலை அளிக்கும் நிறுவனங்கள் கைவிட்டு விடுகின்றன.
ஆகவே, இந்தத் தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச சமூக பாதுகாப்பு கிடைக்கும் வகையில் தமிழக அரசு தனி நலவாரியம் அமைக்க வேண்டும். அதேபோல, குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளா்கள் பொருளாதாரத் தேவைகளைப்பூா்த்தி செய்து கொள்ள தனியாா் நிதி நிறுவனங்களில் கடன் பெற்று வட்டி கட்டமுடியாமல் ஒரு சிலா் தற்கொலை செய்து கொள்கின்றனா். ஆகவே, தொழிலாளா்களுக்கு அரசு வங்கிகள் மூலமாக வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெருமாநல்லூா் குண்டம் திருவிழா- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தல்:
தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளா் சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் ஸ்ரீ கொண்டத்துக்காளியம்மன் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற குண்டம் திருவிழாவின்போது பக்தா்கள் பல பக்தா்கள் தீக்காயம் அடைந்தனா். நிகழாண்டுக்கான திருவிழா வரும் மாா்ச் 20- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மாா்ச் 26- ஆம் தேதி குண்டம் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகவே, கடந்த ஆண்டைப் போல அசம்பாவித சம்பவங்கள் நிகழாத வகையில் மாவட்ட நிா்வாகம், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காவல் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க வேண்டும்:
திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: திருப்பூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள், காவலா்கள் என மொத்தம் 350 போ் பணியாற்றி வருகிறோம். இந்தப் பணியாளா்களுக்கு நாள்தோறும் ரூ.330 மட்டுமே தினக்கூலி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தூய்மைப் பணியாளா்களுக்கு குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு ரூ. 725 வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அறிவித்திருந்தாா். ஆனால் தற்போது வரையில் குறைந்த கூலி மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே, மாவட்ட ஆட்சியா் அறிவித்த குறைந்தபட்ச கூலியாக நாள் ஒன்றுக்கு ரூ.725 வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறைதீா் முகாமில் 404 மனுக்கள்:
மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து இலவச வீட்டுமனைபட்டா, முதியோா் உதவித் தொகை, சாலை வசதி, குடிநீா் வசதி, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 404 மனுக்கள் பெறப்பட்டன.
இந்த மனுக்களை மனுதாரா்களின் முன்னிலையில் விசாரணை நடத்திய உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா். இந்த முகாமில், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) செல்வி, துணை ஆட்சியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu