திருப்பூர் மாவட்டத்தில், 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை
Tirupur News- திருப்பூர் மாவட்டத்தில், 5 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- விநாயகர் சதுர்த்தி விழா வரும் 18-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில், சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக பல்லடம் அருகே உள்ள அலகுமலை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இங்கு திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்வதற்காக 5 ஆயிரம் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கந்த சஷ்டி கவசத்தை போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர், கொரோனாவை வென்ற விநாயகர், சிவலிங்கத்தை தூக்கி வரும் பாகுபலி விநாயகர், ஆறு கரங்கள் ஐந்து தலை நாகத்தில் நாக விநாயகர், பால விநாயகர், லட்சுமி விநாயகர், சித்தி புத்தி என இருவருடன் எழுந்தருளும் விநாயகர், உள்ளிட்ட புதிய வடிவ விநாயகர் சிலைகள் உள்ளன . 1 முதல் 9 அடி வரை வித்தியாசமான வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து இந்து முன்னணி நிர்வாகிகள் கூறியதாவது,
விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழ்நாட்டில் இந்து முன்னணி சார்பில் சுமார் 2 லட்சம் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு எழுச்சியாக கொண்டாடப்பட உள்ளது. திருப்பூர்,கோவை, ஊட்டி, ஈரோடு, உள்ள மாவட்டங்களில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. விநாயகர் சிலைகள் முன்பு பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்ற ரசாயனத்தின் மூலம் தயாரிக்கப்பட்டு வந்தது. இதனால் சிலைகள் தண்ணீரில் எளிதில் கரையாது. சுற்றுப்புற சூழல் மாசு அடையும் என்கின்ற நோக்கில் அரசு ரசாயன கலவை மூலம் சிலைகள் தயாரிக்க தடை விதித்தது. தற்போது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் காகித கூழ் மாவு,குச்சி கிழங்கு மாவு உள்ளிட்ட இயற்கை பொருட்களால் சிலைகளை தயாரித்துள்ளோம். சிலைகளை விசர்ஜனம் செய்யும்போது மிக எளிதில் தண்ணீரில் கரைந்து விடும்.
இந்த ஆண்டு 3 அடி முதல் 9 அடி வரையிலான சித்தி விநாயகர், பால விநாயகர், சிம்மவிநாயகர் கந்த சஷ்டி கவசம் போற்றும் வகையில் முருகனுடன் அருள் புரியும் விநாயகர், தாமரை விநாயகர், மயில் விநாயகர் உள்பட பல்வேறு புதிய தோற்றங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு வாட்டர் கலர் என்னும் இயற்கை வர்ணம் கொண்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது. விநாயகர் சிலை குளம், குட்டைகளில் கரைத்தவுடன் அங்கு வாழும் மீன்களுக்கு அவை உணவாகப் போகும் வகையில் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. சிலை தயாரிப்பில் எந்த இடத்திலும் ரசாயனம் பயன்படுத்தப்படவில்லை. இந்த ஆண்டு ‘அன்னை தமிழைக் காக்க ஆன்மீகம் வளர்ப்போம்’ என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த உள்ளோம்.
திருப்பூர் மாவட்டத்தில் 5,000 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சிலை பிரதிஷ்டை செய்து யாகவேள்வி வழிபாடு நடத்தி ஏழை,எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவி செய்து சிறப்பான முறையில் கொண்டாட முடிவு செய்துள்ளோம். கடந்த ஆண்டு கோவை கோட்டத்தில் ஐந்தாயிரம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் அதே அளவிற்கு சிலை பிரதிஷ்டை செய்து பொதுக்கூட்டம் ஊர்வலம் நடத்தி அரசின் விதிமுறைகளை பின்பற்றி திருப்பூர் மாநகரில் 4 நாட்களும், பல்லடத்தில் 3 நாட்களும், பொங்கலூர் பகுதியில் 2 நாட்களும் என விநாயகர்சதுர்த்தி விழா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu