திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; காப்பக நிர்வாகி, விடுதி காப்பாளர் கைது

திருப்பூரில் 3 சிறுவர்கள் பலி; காப்பக நிர்வாகி,  விடுதி காப்பாளர் கைது
X

திருப்பூரில் சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட செந்தில்நாதன், கோபிகிருஷ்ணன்.

Police Arrest -திருப்பூரில் 3 சிறுவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் குழந்தைகள் காப்பக நிர்வாகி, விடுதி காப்பாளர் இருவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Police Arrest -திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம் செயல்பட்டு வந்தது. இதன் நிர்வாக அறங்காவலராக இருந்தவர் செந்தில்நாதன் (வயது 58). விடுதி காப்பாளராக கோபி கிருஷ்ணன் (54) என்பவர் பணியாற்றி வந்தார். இந்த காப்பகத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் உள்பட 15 சிறுவர்கள் தங்கி, அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில், அந்த குழந்தைகள் படித்து வந்தனர். அவர்களுக்கு காப்பகத்தில், மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டது. காப்பக விடுதியில் தங்கியிருந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 5-ம்தேதி இரவு காப்பகத்தில் இருந்த 14 சிறுவர்களுக்கு திடீர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதில் மறுநாள் காலை மாதேஷ் (15), பாபு (13), ஆதிஷ் (8) ஆகிய 3 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து மற்ற 11 சிறுவர்கள், திருப்பூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். காப்பக விடுதியில், குழந்தைகளுக்கு கெட்டுப்போன ரசம், சாதம் இரவு உணவாக வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதித்து அவர்கள் உயிரிழந்ததாக, பரபரப்பு ஏற்பட்டது.

காப்பக சிறுவர்கள் மூன்று பேர் பலியான சம்பவம், திருப்பூர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் இதுகுறித்து, 48 மணி நேரத்துக்குள் தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டது. இதுகுறித்து வருவாய்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். மேலும் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி மணிவாசன், மாணவர்களிடம் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பித்தார். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தை பார்வையிட்டு, விசாரணை நடத்தினார். காப்பகத்தில், போதிய பாதுகாப்பற்ற சூழல் இருப்பதையும், சிறுவர்களின் உயிரிழப்புக்கு காப்பக நிர்வாகத்தின் மெத்தனமும், அலட்சியப்போக்கும், கவனக்குறைவுமே காரணம் என, அவரது விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தை மூடவும் உத்தரவிட்டார். அதன்பின், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் முன்னிலையில், காப்பகம் பூட்டு போட்டு மூடப்பட்டது.

உயிரிழந்த சிறுவர்களின் குடும்பங்களுக்கு, தமிழக அரசு தரப்பில் நிவாரணமாக தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும், இந்த காப்பகத்தில் இதுவரை தங்கி படித்த சிறுவர்களை, ஈரோடு காப்பகத்துக்கு மாற்றவும், அங்கு தடையின்றி அவர்களது கல்வியை தொடரவும், அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து விவேகானந்தா சேவாலயம் மூடப்பட்டு, கடந்த ஒரு மாதமாக காப்பகத்தின் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், காப்பகத்தின் நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், விடுதி காப்பாளர் கோபி கிருஷ்ணன் ஆகியோரை திருமுருகன்பூண்டி போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் இரண்டு பேரையும் போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது