திருமுருகன் பூண்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்; 2வது நாளாக கோலாகலம்
Tirupur News- சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த திருமுருகநாத சுவாமி.
Tirupur News,Tirupur News Today -பக்தர்கள் வெள்ளத்தில் தேரோட்டம்; பூண்டியில் 2வது நாளாக கோலாகலம்
திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவிலில், இரண்டாவது நாளாக நேற்று, தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் மாசி மகத் தேர்த்திருவிழா, 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
தினமும், சிறப்பு பூஜைகள், திருவீதியுலா நிகழ்ச்சிகள் விமரிசையாக நடந்தது. நேற்று முன்தினம், சோமாஸ்கந்தர், முயங்கு பூண்முலை வல்லியம்மை மற்றும் வள்ளி, தெய்வானை சமேத சண்முகநாதர் தேரோட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம், அம்மன் தேர்மட்டும் நிலைசேர்ந்தது. மற்ற தேர்கள், தேர்வீதிகளில் நிறுத்தப்பட்டிருந்தன.
நேற்று மாலை மீண்டும் வடம்பிடித்து, தேர் இழுக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் 'அரோகரா...' 'ஓம் நமசிவாய' கோஷத்துடன், தேர் இழுத்தனர்; தேர்வீதிகளை கடந்து வந்து, தேர்கள் நிலையை அடைந்து, மகாதீபாராதனை செய்யப்பட்டது. இன்று காலை பரிவேட்டை, குதிரை மற்றும் சிம்ம வாகன காட்சியும், தெப்பத்திருவிழாவும் நடக்கிறது.
வேடுபறி திருவிழா
நாயன்மார்களில் ஒருவரான சுந்தரமூர்த்திநாயனாருடன், சிவபெருமானிடம் வேடுபறி திருவிளையாடல் நிகழ்ந்த தலம் திருமுருகன்பூண்டி. சேரமானிடம், பரிசு பொருட்கள் பெற்று, சிவசேவை செய்ய சுந்தரர் திருவாரூர் திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது, சிவபெருமான் திருவிளையாடல் நிகழ்த்தி, அவற்றை கவர்ந்து சென்றார்; பொருட்களை பறிகொடுத்த சுந்தரர், திருமுருகநாதனை மனமுருக வேண்டிய போது, கோவில் வளாகத்திலேய, அந்த பொருட்கள் கிடைத்ததாக தலபுராணம் கூறுகிறது.
அதை நினைவு கூறும் வகையில், திருமுருகன்பூண்டி தேர்த்திருவிழாவின் போது வேடுபறி திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, நாளை வேடுபறி திருவிழா நடக்க உள்ளது. சுந்தரர், கூப்பிடு விநாயகர் கோவில் அருகே வருவது; மாறுவேடத்தில் வரும் சிவபெருமான் பொருட்களை கவர்வது; சுந்தரர், தேவார பாடல்களை பாடி, மீண்டும் பரிசு பொருட்களை பெறுவது போன்ற திருவிளையாடல் காட்சிகள் நாளை நடக்க உள்ளது.
வரும், 28ம் தேதி பிரம்மதாண்டவ தரிசன காட்சியும், 29ல், மஞ்சள் நீர் விழா, மயில்வாகன காட்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu