தாராபுரத்தில் 23 சக்கர நீளமான லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம்
Tirupur News- தாராபுரத்தில் லாரிகளை சிறைபிடித்து மக்கள் போராட்டம் நடத்தினர் (கோப்பு படம்)
Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொன்னிவாடி அருகே காற்றாலை அமைப்பதற்கு தேவையான உபகரணங்களை ஏற்றிக்கொண்டு 26 சக்கரங்கள் கொண்ட 13 கனரக லாரிகள் வந்தன. இந்த லாரிகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீரென லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில்,
தாராபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான மூலனூர், கன்னிவாடி மற்றும் குடிமங்கலம் ,கோவிந்தாபுரம், சத்திரம், குண்டடம், மடத்துக்குளம் என திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு சிறிய அளவிலான காற்றாடிகள் அமைக்கப்பட்டு வந்தது.
இப்பொழுது ஒரு காற்றாடி ரூ.8 கோடி முதல் 12 கோடி வரை பெரிய அளவில் அமைக்கப்பட்டு வருகிறது . ஆலைகளில் அமைக்கப்படும் காற்றாடி இறக்கைகள் மற்றும் உபகரணங்கள் 200 அடி நீளமுள்ள லாரிகளில் ஏற்றி வருகின்றனர்.
தாராபுரத்தில் இருந்து பகவான் கோவில் , பொன்னிவாடி செல்லும் சாலையானது 7 மீட்டர் கொண்ட சாலை ஆகும் .இதில் 6 மீட்டர் அகலமுள்ள லாரிகள் வருகின்றன. அதுவும் இந்த லாரிகளானது ஒவ்வொரு லாரியாக வராமல் தொடர்ச்சியாக 10 லாரிகள், 15 லாரிகள் என சாலையில் வரும் போது போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது. இதனால் காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே குறிப்பிட்ட நேரத்தில் குறைந்த அளவில் மட்டும் லாரிகள் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் மூலனூர் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கேஸ் சிலிண்டர் சப்ளை செய்பவர் மூலம் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த கும்பல்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள பொங்குபாளையம் கிராமம் அய்யம்பாளையம் கோல்டன் அவென்யூ பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் சுரேஷ் ( வயது 52). சம்பவத்தன்று இவர் காலையில் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளார். பின்னர் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த சுரேஷ், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போனது தெரிய வந்தது.
உடனே இதுகுறித்து சுரேஷ், பெருமாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். கேமராவில் 3 பேரின் உருவம் பதிவாகி இருந்தது.
அவர்கள் யாரென்று விசாரணை நடத்திய போது நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்த சங்கர் (42), மற்றும் திருப்பூர் பெரிய கடைவீதி பகுதியை சேர்ந்த முரளி (வயது 27) , நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த மணிமாறன் (35) என்பது தெரியவந்தது. 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்களை திருப்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
கைதான மணிமாறன் பொங்குபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வீடு வீடாக சென்று கியாஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்போது இவர் அப்பகுதிகளில் உள்ள வீடுகளை கண்காணித்துள்ளார். திருடுவதற்கு ஏற்றவாறு எந்த வீடுகள் பூட்டப்பட்டு இருக்கிறது. அதன் அருகில் ஆட்கள் நடமாட்டம் உள்ளதா? என நோட்டமிட்டு தனது கூட்டாளிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்படி சங்கர், முரளி ஆகிய 2 பேரும் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதனால் இந்த குற்றத்திற்கு முக்கிய காரணமாக இருந்த மணிமாறனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu