காட்டு யானைகள் தாக்கியதில் வாலிபர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டத்தை கலக்கி வரும் காட்டு யானைகள்
தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு காட்டு யானைகள் கடந்து சென்றன. இதனைக் கண்ட வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர். பைக்கில் வந்த வாலிபர் ஒருவர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியாததால், அவர் யானைகளை மிக அருகில் சென்றார். அப்போது யானைகள் அவரை தாக்க முயன்றன. யானைகளிடமிருந்து நூலிழையில் அவர் தப்பி சென்றார்.
நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன. கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனால் ஆவேசமடைந்து ஓடிய யானைகள், பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த மாசிலாமணி என்பவரது பசுமாடு மீது மோதின. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.
இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.
நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.
அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியதில் லோகேஷ் (வயது 28) என்ற இளைஞர் தவறி கீழே விழுந்தார். அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.
இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.
இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu