வாணியம்பாடியில் பட்டு கூடுகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் ஏமாற்றம்

பட்டு கூடுகளை வெளி மாநிலத்திற்கு விற்பனைக்கு கொண்டு செல்ல காத்திருக்கும் விவசாயிகள்.
வாணியம்பாடி அரசு பட்டு கூடு அங்காடியில் பட்டு கூடுகளுக்கு உரிய விலை கொடுக்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர். அதனால்,பட்டுப்பூச்சி கூடுகளை வெளி மாநிலத்திற்கு எடுத்து சென்ற அவலம் ஏற்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோனாமேடு பகுதியில் இயங்கிவரும் பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் அரசு பட்டு கூடு அங்காடி இயங்கி வருகிறது. இங்கே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் வளர்க்கப்பட்ட பட்டுப்பூச்சி கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாணியம்பாடி அலுவலகத்தில் விவசாயிகள் கொண்டு வரும் பட்டு கூடுகளை உரிய விலைக்கு எடுக்காமல் குறைந்த விலை தருவதாக பட்டு விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வெளி மாநிலங்களில் பட்டுகூடுகளை நல்ல விலைக்கு எடுத்துக்கொள்கின்றனர். அதனால், விற்பனைக்கு கொண்டு வந்த பட்டு கூடுகளை விவசாயிகள் வெளி மாநிலத்திற்கு எடுத்து சென்றனர்.
மேலும், விவசாயிகள் கூறுகையில் :-
திருப்பத்தூர் மாவட்டத்தில் 2500 ஏக்கர் நிலப்பரப்பில் 400 விவசாயிகள் உள்ளதாக அரசுக்கு அதிகாரிகள் கணக்கு காட்டி உள்ளனர். ஆனால் 11 விவசாயிகள் மட்டுமே கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்து போடுகிறோம். ஆனால் அந்த 11 விவசாயிகளுக்கு கூட உரிய விலையை அதிகாரிகள் கொடுப்பதில்லை. வெளி மாநிலத்திற்கு சென்று கூடுகள் கொடுத்தால் கூடுதல் விலை கிடைக்கின்றது.
கர்நாடகா மாநிலம் ராம் நகரில் ஒரு கிலோ பட்டு கூடு ரூ.670 க்கும், ஆந்திராவில் ரூ.570 க்கு கொள்முதல் செய்யும் நிலையில் வாணியம்பாடியில் வெறும் ரூ.350 க்கு விலை நிர்ணயம் செய்கின்றனர். பட்டு விவசாயிகள் கொண்டுவரும் பட்டு கூடுகளுக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய வேண்டும். மேலும் வெண்பட்டுக்கு முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஆனால், தற்பொழுது தமிழகத்தில் உற்பத்தி செய்யும் வெண்பட்டுக்கு உரிய விலை இல்லாததால் வெளி மாநிலத்திற்கு சென்று விற்கக்கூடிய நிலை உருவாகி உள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மிகுந்த சிரமத்தையும் மன உளைச்சலையும் சந்தித்து வருகின்றனர்.
எனவே, இது குறித்து தமிழக அரசு வெண்பட்டு உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தகுந்த விலை நிர்ணயம் செய்து அரசு கொள்முதல் செய்து அவர்களுக்கான விலையை கொடுத்து வாங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu