சினிமா பாணியில் காரை மறித்து ரூ.25 லட்சம் கொள்ளை
கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட காரை சோதனையிடும் போலீசார்.
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி பகுதியை சேர்ந்த ஹார்டுவேர் கடை நடத்தி வருபவர் ஞானசேகரன். இவர் தனது காரில் நண்பர்களுடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
வாணியம்பாடி அருகே வளையாம்பட்டு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்தபோது, மற்றொரு காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென ஞானசேகரன் காரை வழிமறித்து அந்த கும்பல் இறங்கி சரமாரியாக அரிவாள் போன்ற ஆயுதங்களில் தாக்கினர். பின்ன்ர், ஞானசேகரன் காரில் இருந்த 25 லட்சம் ரூபாயை எடுத்துகொண்டு அவர்கள் தப்ப முயன்றனர்.
அப்போது, அவர்களுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அப்போது ஞானசேகரனின் நண்பர் ஒருவர் கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் இருந்த சாவியை எடுத்து மேம்பாலத்தில் இருந்து 100 அடி பள்ளத்தில் வீசியுள்ளார். இதனால், கொள்ளை கும்பல் அங்கிருந்து பணத்துடன் ஓட்டம் பிடித்து தப்பினர்.
இதனைத்தொடர்ந்து, ஞானசேகரன் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின்பேரில் விரைந்து வந்த வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். இதனை அறிந்த திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு வந்தார்.
அப்போது, கொள்ளையர்கள் பயன்படுத்திய காரில் வழக்கறிஞர் என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. மேலும், காரின் நம்பர் பிளேட்டுகளில் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் 2 பதிவு எண்கள் பொருத்தி இருந்தது. காரில் இருந்த பான்கார்டு, ஆதார் அட்டைகள் மற்றும் காவலர்கள் பயன்படுத்தும் தொப்பி உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஞானசேகரன் என்பவர் குடியாத்தம் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் வெற்றி பெற்ற பணம் சுமார் 25 லட்சம் ரூபாய் கொண்டு வந்ததாகவும், இதனால் ஏற்பட்ட மோதலால் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தலைமையில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம், ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் மற்றும் வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் பல்வேறு பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu