வாணியம்பாடியில் மஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை
கொலையாளிகளை கைது செய்யக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்து வந்தவர் வசீம் அக்ரம் (40). இவர் மனித நேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தவர், சமூக ஆர்வலரும் ஆவார். அத்துடன் வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக உள்ளார்.
வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு மாலை 6 மணிக்கு சென்று தொழுகை முடித்து விட்டு தனது 7 வயது குழந்தை உடன் வீட்டு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து வெட்டி சாய்த்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இருந்த மக்கள் அலறி அடித்து ஓடினார்கள். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர்.
தகவலின் பேரில் வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (கூடுதல் பொறுப்பு) வேலூர் எஸ்பி செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
இதனை தொடர்ந்து கொலையாளிகளை காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென திருப்பத்தூர்- வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலை மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன. பதட்டம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
தகவலின் பேரில் வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை பிடிக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து காஞ்சிபுரம் அருகே பாலு செட்டி சத்திரம் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது வேலூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதை கண்ட போலீஸார் அந்த காரை மடக்கி பிடித்து அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியை சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவர் கைது செய்து விசாரித்த போது, கடந்த 26.7.2021ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள டீல் இந்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தி, 8 கிலோ கஞ்சா,10 செல்போன்களை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனை போலீஸாருக்கு காட்டி கொடுத்தால் டீல் இம்தியாஸ் உடன் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து அவர்கள் வந்த கார் மற்றும் காரில் இருந்த 10 பட்டா கத்திகள் பறிமுதல் செய்து தப்பி ஓடிய கார் ஒட்டுணர் உட்பட 5 பேர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
அசம்பாவிதம் நடக்காமல் இருக்க வேலூர் டி.ஐ.ஜி பாபு தலைமையில் 2 எஸ்.பிகள், 1 ஏ.டி.எஸ்.பி, 6 டி.எஸ்.பிக்கள், 15 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மகன் கண் எதிரிலேயே தந்தை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu