வாணியம்பாடியில் வேலை வாங்கித் தருவதாக ரூ.15லட்சம் மோசடி: இளம்பெண் புகார்
கைக்குழந்தையுடன் புகார் அளிக்க வந்த ஜெயசுதா.
வாணியம்பாடியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரின் உதவியாளர் வேலை வாங்கித் தருவதாக இளம்பெண்ணிடம் ரூ 15 லட்சம் மோசடி. வாணியம்பாடி நகர போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா. பட்டதாரி பெண்ணான இவர் வேலை இல்லாமல் இருந்துள்ளார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் உதவியாளராக வேலை பார்த்து வருபவர் சென்னம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரகாசம். இவர் கடந்த 5 ஆண்டாக தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் உதவியாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயசுதாவிடம் 15 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு தொழிலாளர் நலத்துறையில் ஜூனியர் அசிஸ்டென்ட் வேலை வாங்கித்தருவதாக உறுதி அளித்துள்ளார். இதை நம்பி இருந்த ஜெயசுதா பலமுறை வேலை குறித்து பிரகாசத்திடம் கேட்டுள்ளார். ஆனால், வேலை வாங்கித் தரவில்லை. அதனால், கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால், பணம் கொடுக்க முடியாது என பிரகாசம் தெரிவித்து அவதூறாக பேசியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பின்னர் 2019ம் ஆண்டில் அவர் வாங்கிய ரூ. 15 லட்சம் பணத்தில், 7 லட்சம் ரூபாய் திருப்பித் தந்து விட்டதாகவும் தெரியவந்துள்ளது. மீதமுள்ள பணத்திற்கு 2 காசோலைகளை வழங்கி உள்ளார். அந்த காசோலையில் பணம் இல்லாமல் திரும்பி வந்துவிட்டது. மீண்டும் பிரகாசத்தை தொடர்புகொண்டு ஜெயசுதா கேட்டதற்கு தற்போது பணம் தர முடியாது என்று மிரட்டியதாக தெரிகிறது. இதனால் ஜெயசுதா, வாணியம்பாடி நகர காவல் நிலையத்திற்கு கைக்குழந்தையுடன் வந்து புகார் அளித்துள்ளார். இந்நிலையில் புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu