மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் 33,000க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்ற வேட்பாளர்
பிரியதர்ஷினி ஞானவேலன்
திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள 13 வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிகளையும் தி.மு.க கூட்டணியே கைப்பற்றியுள்ளது. இவற்றில் காங்கிரஸ் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் வேட்பாளர்கள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
வி.சி.க வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் திருப்பத்தூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 8-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் சசிகலா மாதனூர் ஒன்றியத்தை உள்ளடக்கிய 2-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 'கை' சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளார்.
மற்ற வார்டு 11 மாவட்ட கவுன்சிலர் இடங்களிலும் தி.மு.க வேட்பாளர்களே நேரடியாகக் களமிறக்கப்பட்டனர். அ.தி.மு.க கூட்டணி ஒரு மாவட்ட கவுன்சிலர் பதவியைக்கூட கைப்பற்றவில்லை.
இதில் ஆலங்காயம் ஒன்றியத்தை உள்ளடக்கிய 3வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட்ட தி.மு.க வேட்பாளர் பிரியதர்ஷினி ஞானவேலன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்து அபார வெற்றி பெற்றுள்ளார்.
பிரியதர்ஷினி ஞானவேலன் பெற்ற மொத்த வாக்குகள் 33,844. அ.தி.மு.க கூட்டணியிலிருக்கும் பா.ஜ.க வேட்பாளர் வளர்மதி அசோகன் 5,458 வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இவரைக் காட்டிலும் 28,386 வாக்குகளை கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் பிரியதர்ஷினி ஞானவேலன். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுகன்யா 2,666 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், தே.மு.தி.க வேட்பாளர் தனலட்சுமி 1,338 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தனர்.
பிரியதர்ஷினி ஞானவேலன். இவரின் கணவர் ஞானவேலன் ஆலங்காயம் மேற்கு ஒன்றியச் செயலாளராக தி.மு.க-வில் பொறுப்பு வகிக்கிறார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu