கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்கள் குடும்பத்திற்கு நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு
தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வாங்க 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவச புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலின் அடிப்படையில் இலவச புடவைக்கான டோக்கன் வாங்க 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் வந்திருந்தனர். ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் டோக்கன் வாங்க அனைவரும் முண்டியடித்துக்கொண்டு சென்றதால், பலர் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.
இதில் பெண்கள் பலர் மயக்கம் அடைந்து ஆபத்தான நிலையில் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தவர்களில் 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்திற்குச் சென்று வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா அரசு மருத்துவமனைக்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். இதனையடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும், ஜல்லி நிறுவன உரிமையாளருமான ஐயப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கிய 4 பெண்கள் பலியானதை அடுத்து, அவர்களது குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் கடும் காயம் அடைந்து மூச்சு திணறல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் மற்ற 3 பெண்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu