திருப்பத்தூர் மாவட்டம் தூய்மை மாவட்டமாக விரைவில் மாறும்: கலெக்டர்
2021-2022 ஆம் ஆண்டின் பசுமை விருது வழங்கும் விழாவில் கலெக்டர் அமர் குஷ்வாஹா
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சின்னகல்லுபள்ளியில் உள்ள மருதர் கேசரி ஜெயின் மகளிர் தனியார் கல்லூரியில் மகாத்மா காந்தி தேசிய அளவிலான கிராமப்புற உயர்கல்வி மேம்பாட்டு அமைச்சகத்தின் செயல்திட்ட விருது வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவிற்கு கல்லூரியின் தலைவர் விமல் சந்த் தலைமை தாங்கினார். செயலாளர் லிக்மிசந், நிர்வாக இயக்குனர்கள் ராஜேஷ் குமார், ஆனந்த் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் முதல்வர் எம். இன்பவல்லி வரவேற்றுப் பேசினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு பேசியதாவது, மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் மகாத்மா காந்தி தேசிய அளவிலான, உயர் கல்வி மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2021-2022 ஆம் ஆண்டின் பசுமை விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஏனெனில் தற்போதுள்ள சூழ்நிலையில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், மரங்களை நடுவதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உள்ளது.
இந்த மாவட்டத்திலுள்ள 208 கிராமங்களிலும், கிராம பஞ்சாயத்துகளிலும், திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர், நகராட்சிகள் மற்றும் நாட்றம்பள்ளி, உதயேந்திரம், ஆலங்காயம் உள்ளிட்ட பேரூராட்சி பகுதிகளிலும் தூய்மை பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் சென்று குப்பைகளை சேகரிக்க தூய்மைப் பணியாளர்கள் அனுப்பப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.
ஏலகிரி போன்ற சுற்றுலாத்தலத்தில் மிகத் தூய்மையாக வைக்க வேண்டும் என தூய்மைப் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். கிராமப் பகுதி மற்றும் நகரப் பகுதிகளிலும் பச்சை மற்றும் சிவப்பு நிறங்களில் கொண்ட பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன, அதில் இந்த குப்பைகளை கொட்ட வேண்டும் என்றும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெளியில் கொட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது வருகின்ற செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் தமிழ்நாட்டிலேயே திருப்பத்தூர் மாவட்டம் சுகாதாரம் மிக்க மாவட்டமாக மாற்றியே தீர வேண்டும் என்று பணியாற்றி வருகிறோம்.
தற்போது உள்ள நிலவரப்படி வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் நூறு சதவீத பணியாளர்களை கொண்டு வீடுகளில் குப்பை சேகரிக்கும் பணிகள் நடைபெறும். தற்போது 60 முதல் 70 சதவீதம் வரையில் குப்பைகள் சேகரிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் குப்பைகளை பிரித்து எடுத்து செல்லும் போது அந்த குப்பைகள் கொண்டுபோய் கிடங்கில் கொட்டப்பட்டு தரம் பிரிக்கப்பட்டு உரங்களாக மாற்றப்படுகின்றது.
ஏலகிரி மலையை பொருத்தவரையில் தினசரி தூய்மை பணிகள் நாளுக்கு நாள் தூய்மைபணிகள் அதிகரித்த படுத்தப்பட்டு வருகிறது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் பகுதிகளில் சாலைகள் தூய்மையாகவும், கால்வாய் தூய்மையாகவும் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாவட்டத்திலுள்ள அனைத்து கல்லூரி மாணவிகளும், மாணவர்களும், ஆசிரியர்களும் பங்களிப்பு அளிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.
நீங்கள் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டம் தூய்மையான மாவட்டமாக அறிவிக்க மிகவும் எளிதாக இருக்கும் இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மத்திய அரசின் செயல் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர். ஜி.ரஜினி, என்.விஜயலட்சுமி, இயக்குனர் அரவிந்த் சுக்லா உட்பட பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் நித்தியா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu