வாணியம்பாடி அருகே ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்

ஆலங்காயம் அருகே ரெட்டியூர் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட ரெட்டியூர் ஊராட்சியில் ராணிப்பேட்டை கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் விவசாய நிலத்தில் பணியாளர்கள் நிலத்திற்கு வரப்பு கட்டும் பணிகளை நேரடியாக சென்று மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா திடீரென பார்வையிட்டு பணியாளர்களிடம் கடந்த ஆண்டு 100 நாள் வேலை வழங்கப்பட்டதா என்று கேட்டு அறிந்தார்.
வேலை அட்டையில் ரேஷன் கார்டு விவரங்கள் மற்றும் வேலை வழங்கிய விவரங்கள் முறையாக பதிவு செய்யப்படாததை கண்டறிந்தார். 100 நாள் பணியாளர்கள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள், கிருமி நாசினி மற்றும் வெப்ப நிலை பரிசோதனை மற்றும் முகக்கவசம் அணியாமல் வேலை செய்வதை பார்த்தார்.
பின்னர் மல்லிகுட்டை கிராமத்தில் கோவிந்தராஜி என்பவர் பிரதம மந்திரியின் வீடுகள் கட்டும் திட்டத்தை பார்வையிட்டு வீட்டின் அளவு சரியாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். பயனாளியின் வங்கி கணக்கு புத்தக்தை ஆய்வு செய்து பணம் வரவு வைக்கப்பட்டதை உறுதி செய்த பின்னர் வீட்டின் பட்டா யார் பெயரில் உள்ளது என்று ஆய்வு செய்தார், பயனாளியின் தந்தை பெயரில் உள்ளது, ஆனால் மகன் பெயரில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
அரசின் விதியை மீறி ஆணை வழங்கப்பட்டுள்ளது என்பதற்காகவும், மேற்கூறிய 100 நாள் வேலை உறுதி திட்ட பதிவுகள் சரியாக இல்லாததாலும், ஊராட்சி செயலாளர் ஆனந்தன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ய வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்திரவிட்டார்.
ஊராட்சி செயலாளர்கள் முறையாக கிராமத்தின் வளர்ச்சி பெறும் வகையில் பணியாற்ற வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராம ஊராட்சிகளில் நடைப்பெறும் பணிகளை முறையாக ஆய்வு செய்திடவும், அரசின் விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்கவும், கொரோனா நோய் அறிகுறி ஆய்வு பணிகளை தொய்வின்றி செய்திடவேண்டும் என்று கூறினார்.
இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விநாயகம், மணவாளன், ஆகியோர் இருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu