சுடுகாட்டுக்கு வழி கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்; போக்குவரத்து பாதிப்பு
சுடுகாட்டுக்கு வழிகேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட கிருஷ்ணா நகர் மக்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், குரிசிலாப்பட்டு ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அதே பகுதியைச் சேர்ந்த கண்ணம்மா என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்து உள்ளார்.
கண்ணம்மாவின் உடலை இன்று அடக்கம் செய்ய சுடுகாட்டிற்கு செல்லும்போது, அப்பகுதியில் உள்ள ஒரு சிலர் வழியை அடைத்து தனி நபருக்கு சொந்தமான பட்டா நிலம் எனக்கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திருப்பத்தூரிலிருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த குரிசிலாப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகள் உறுதிமொழியை ஏற்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் திருப்பத்தூர் - ஆலங்காயம் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu