திருப்பத்தூர் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய்களில் ரத்தம்

அனுமதியின்றி குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தோல்களை பறிமுதல் செய்து ரசாயனம் தெளித்தனர்.
திருப்பத்தூர் டவுன் ஜார்ஜ் பேட்டை மற்றும் அபாய்தெருக்களில் நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் குழாய்களில் மாட்டு ரத்தம் கலந்து வந்தது. இதுகுறித்து பல்வேறு புகார்கள் நகராட்சி தலைவர், மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது. உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி கலெக்டர் உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் டவுன் 27-வது வார்டு சுல்தான்மியான்தெரு, அமீனுதீன் தெரு, 24-வது சின்ன மதர் தெரு ஆகிய பகுதிகளுக்கு நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், துணைத்தலைவர் சபியுல்லா நகராட்சி துப்புரவு ஆய்வாளர் விவேக், நகர அபிவிருத்தி அலுவலர் கவுசல்யா, ஆகியோர் பல்வேறு இடங்களில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது அனுமதியின்றி மாடு அறுக்கும் தொட்டி மாட்டு தோல்கள், கழிவுகள், மாடு வயிற்றில் இருந்து எடுக்கப்பட்டு பல மாதங்களாக டிரம்களில் தேக்கி வைக்கப்பட்டிருந்த பேரம்பொட்டி எனப்படும் கழிவு,ஆகியவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிட்டனர்.
பல குடோன்களில் வைக்கப்பட்டிருந்த தோல்கள் மற்றும் மாட்டு கழிவுகள், மாட்டு எலும்புகள், ஈரோடு அனுப்பப்பட்டு அங்கிருந்து சைனாவுக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது. இந்த தோல் கழிவுகள் யாரும் அந்த பகுதியில் உள்ளே நுழைய முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. பல்வேறு இடங்களில் மாடு அறுப்பதற்காக வீடுகள் உள்ள பகுதிகளில் மாடுகள் மற்றும் கன்று குட்டிகளை வளர்த்து வருகிறார்கள்
எந்தவித அனுமதியின்றி குடியிருப்பு பகுதிகளில் தினமும் மாடுகளை அறுத்து விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இதுநாள் வரை யாரும் அனுமதி அளிக்கவில்லை. எனவே அனுமதியின்றி நடத்திவரும் மாடு அறுக்கும் தொட்டிகள் மற்றும் தோல் மற்றும் கழிவுகள் எலும்புகள் சேகரித்து வைக்கும் குடோன்கள் உடலை மூட நகராட்சி அலுவலர்கள் உத்தரவிட்டனர்.
மாட்டுக் கறி விற்பனை செய்யும் கடைகள் தெருக்களில் இருந்து 3, அடி தூரம் தள்ளி கண்ணாடி போட்ட அறைக்குள் வைத்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேசன் கூறுகையில், அனுமதியின்றி செயல்பட்ட மாடு அறுக்கும் தொட்டிகள் மற்றும் குடோன்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தனியாக வெங்கடேஸ்வரா நகரில் அரசு புதிய மாடு அறுக்கும் தொட்டி கட்டி தர ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட தோல்களை ரசாயனம் தெளித்து நகராட்சிகளில் எடுத்துச் சென்றனர். மேலும் கழிவு நீர் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட இடங்களை பொக்லைன் வைத்து இடித்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu