லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்: கே.சி வீரமணி பேட்டி

லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்: கே.சி வீரமணி பேட்டி
X

திருப்பத்தூரில் பத்திரிகையளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி

லஞ்ச ஒழிப்பு போலீசார் பொருட்களை கைப்பற்றியதாக கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்யானது என முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி பேட்டி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் ஆகியோரின் குடியிருப்புகளை உள்ளடக்கிய பெங்களூரில் 2 இடங்கள் மற்றும் சென்னையில் 6 இடங்கள் உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.

இந்த சோதனையானது காலை 6 மணி முதல் தொடங்கி இரவு 12 மணிவரை நடைபெற்றது. இதில் சுமார் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து திருப்பத்தூர் தனியார் ஹோட்டலில் முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, கடந்த 16ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 3 மணி அளவில் பல பொருட்களை கைப்பற்றியதாக பொய்யான தகவல் அறிக்கையை வெளியிட்டனர். ஆனால் எனது வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகை மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் மின்சார கட்டண ரசீது, மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்துச் சென்றனர்.

ஆனால் அந்த தங்க நகைகள் கூட தேர்தல் பிரமாண பத்திரத்தில் அதைவிட அதிகமாக கொடுத்திருந்தால் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர். மேலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்கள் உள்ளதாக பொய்யான தகவல்கள் வெளியாகியுள்ளது. நான் சிறு வயது முதலே கார்களை விரும்பி வாங்கும் பழக்கம் உடையவன். என்னிடம் இருக்கும் கார்கள் அனைத்துக்கும் கணக்கு சரியாக உள்ளது. மேலும் நான் சிறுவயதிலிருந்தே வியாபார குடும்பத்தைச் சார்ந்தவன் எனவே என்னிடம் ஒரு ரூபாய் கூட கணக்கில் வராத பணமோ ஒரு அடி நிலம் கூட கணக்கில் வராத நிலமும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆனால் சமூக வலைத்தளங்களில் என்னிடம் கோடி கோடியாக பணமும் வைரம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக வரும் பொய்யான தகவல்கள் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே என்னிடம் கணக்கில் வராத எந்தவிதமான நகையோ பணமோ பொருளோ லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைப்பற்ற படவில்லை என்பதை உங்கள் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன். வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக இரசீது பெற்றுள்ளேன். அதன் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் தனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சோதனை நடத்தி உள்ளனர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிக்கை குறிப்பு முற்றிலும் பொய்யானது எனவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்

Tags

Next Story