திருப்பத்தூரில் காலையிலேயே குடும்பத்துடன் வாக்களித்த கலெக்டர் அமர் குஷ்வாஹா

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. கலெக்டர் குடும்பத்துடன் வாக்களித்தார்

தமிழ்நாட்டில் புதியதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும், இதர மாவட்டங்களில் காலியாக உள்ள பதவியிடங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அதன்படி, இரண்டு கட்ட தேர்தலாக நடத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்து முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெறுகிறது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆறு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இன்று திருப்பத்தூர், நாட்றம்பள்ளி, ஜோலார்பேட்டை, கந்திலி ஆகிய நான்கு ஒன்றியங்களுக்கு முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.

நான்கு ஒன்றியங்களில் உள்ள மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஒன்பது பதவிகளுக்கும், ஒன்றிய கவுன்சிலர் 83 பதவிகளுக்கும், ஊராட்சி மன்ற தலைவர் 137 பதவிகளுக்கும், 1188 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்றுவருகிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உள்ளாட்சித் தேர்தலுக்கான தனது வாக்கினைச் செலுத்தினார். அதேபோல் பொதுமக்களும் உள்ளாட்சித் தேர்தலுக்கான தங்களது வாக்கினைச் செலுத்த காலை முதலே ஆர்வத்துடன் கலந்துவருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆறாயிரத்து 311 வாக்குச்சாவடி அலுவலர்கள் பணிபுரிகின்றனர். அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் ஆயிரத்து 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!