திருப்பத்தூர் ஜவ்வாது மலையில் கோர விபத்து: 7 பேர் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புதூர்நாடு பகுதியில் மினி வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் இறந்த நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜவ்வாது மலைப்பகுதியில் புதூர் நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு ஆகிய மூன்று ஊராட்சிகள் உள்ளன. இதில் சுமார் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால் நெல்லிவாசல் நாடு மலை கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மக்கள் சரக்கு வாகனம்(pickup truck) ஒன்றில் சேம்பரை பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளனர்.
அப்போது, மலைப்பாதையில் பாரம் தாங்காமல் பின்நோக்கிச் சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொலைத்தொடர்பு வசதிகள் இல்லாத பகுதி என்பதால் எளிதில் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொள்ள முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
சுமார் அரைமணி நேரம் போராடிய பிறகு மலைப்பகுதியில் இருந்து சமநிலை பகுதிக்கு வந்த சிலர் 108 ஆம்புலஸ் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் மருத்துவக் குழுவினர் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.
திருப்பத்தூர் வேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய காவல்துறை தடை விதித்துள்ள போதிலும் ஆங்காங்கே கூலி வேலைக்கு செல்வோர், துக்க நிகழ்வுக்கு செல்வோர் சட்டவிரோதமாக சரக்கு வாகனங்களில் செல்வதும் அடிக்கடி விபத்து ஏற்படும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவது வேதனையை அளிக்கும் வகையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu