குறைவான விபத்துகள்: மாநில அளவில் திருப்பத்தூர் மாவட்டம் முதலிடம்
மாதிரி படம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையை காவல்துறையினர் தீவிரமாக மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக, சாலையை கடப்பவர்கள், அதிகப்படியான வேகத்தில் செல்லும் வாகனங்கள், எதிர் திசையில் வாகனங்களில் செல்வது போன்ற காரணங்களால் 80 சதவீதம் விபத்துகள் ஏற்படுவதும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை அதிக விபத்துகள் ஏற்படுவதும் தெரியவந்தன.
இதன் தொடர்ச்சியாக, விபத்துகளை குறைக்கும் பணியாக நடத்தப்பட்ட ஆய்வில் 51 இடங்களில் அதிக விபத்துகள் நடைபெறுவது கண்டறியப்பட்டன.
இதில், பச்சூர் தேசிய நெடுஞ்சாலை முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பச்சூரில் சாலையை கடக்கும் வாகனங்களால் அதிகப்படியான விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த பகுதியில் மட்டும் கடந்த ஒரு மாதத்தில் 4 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
அங்கு, சாலை தடுப்புகள் அமைத்து வாகனங்கள் குறைந்த வேகத்தில் செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதற்கு கைமேல் பலனாக கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு சிறு விபத்து கூட பச்சூர் பகுதியில் நடைபெறவில்லை.
அதேபோல், விபத்துகளை குறைப்பதில் திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது.
இதுகுறித்து, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், கூறுகையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்கள் குறித்து விஐடி பல்கலைக்கழக பேராசிரியர்கள் அடங்கிய குழுவினருடன் நடத்திய ஆய்வில் 37 இடங்கள் முதலில் அடையாளம் காணப்பட்டது.
அதன் பிறகு ஆய்வில் மேலும் 14 இடங்கள் அடையாளம் காணப்பட்டு மொத்தம் 51 இடங்கள் கண்டறியப்பட்டன.
இந்த பகுதிகளில் வேகத்தடை அமைப்பது, எச்சரிக்கை பலகை வைப்பது, பிரதிபலிப்பான்கள், சாலைகளில் தடுப்புகள் வைப்பது, சாலைகளை சீர் செய்யும் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு கருத்துரு வழங்கியுள்ளோம்.
அனைத்துத்துறைகளின் பங்களிப்புடன் இந்த பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும். மாலை 4 மணிக்கு பிறகு விபத்துகள் அதிகம் ஏற்படும் இடங்களில் வாகன சோதனை, காவல்துறை கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
விபத்துகளை குறைப்பதில் காவல் துறையினர் மட்டுமில்லாமல் பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
பொதுமக்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். எதிர் திசையில் வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.
கடந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்துடன் நடப்பாண்டில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் விபத்துகளில் உயிரிழப்பு 54 சதவீதம் குறைத்து மாநில அளவில் முதலிடத்தை பிடித்துள்ளோம் என்று கூறினார்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu