திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் பழுது: கரும்பு அரைவை நிறுத்தம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் திருப்பத்தூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த மாதம் கரும்பு அரைவை தொடங்கியது. இந்நிலையில் கரும்பு அரைவை இயந்திரம் பழுதால் அடிக்கடி அரைவை நிறுத்தப்பட்டு சரிய செய்யப்பட்ட பின் மீண்டும் அரைவை தொடங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சனிக்கிழமை மாலை திடீரென மீண்டும் அரைவை பகுதியில் ஏற்பட்ட பழுதால் கரும்பு அரைவை நிறுத்தப்பட்டது. இதனால் வெளியூா்களில் இருந்து அரைவைக்கு வந்த சுமாா் 50 லாரிகள், 40 டிராக்டா்கள் கரும்பு லோடுகளுடன் ஆலை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.
இரவு கடும் பனிபொழிவால் கரும்பு விவசாயிகள், லாரி ஓட்டுநா்கள் கடும் அவதிக்குள்ளாயினா். இதைத் தொடா்ந்து ஆலைத் தொழிலாளா்கள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பழுதைச் சரி செய்த பின்னா் மீண்டும் கரும்பு அரைவை தொடங்கியது.
பாலினம் கண்டறிந்து கருக்கலைப்பு: 3 போ் குண்டா் சட்டத்தில் கைது
திருப்பத்தூா் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குள்பட்ட பேராம்பட்டு கிராமத்தில் குடிசை வீடு ஒன்றில் கா்ப்பிணி பெண்களின் கருவில் வளரும் குழந்தை குறித்த சோதனை நடத்துவதாக கடந்த அக். 14-ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார துறையினருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், திருப்பத்தூா் மாவட்ட காவல் துறையினா் உதவியுடன் அந்தக் குடிசை வீட்டில் ஆய்வு செய்த போது கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் பகுதியைச் சோ்ந்த 4 பெண்கள் இருந்தனா். அவா்களுடன் சங்கா் என்ற தரகா் இருந்தாா். அவா்களைப் பிடித்து காவல் துறையினா் விசாரித்தனா். இதில், சங்கா் என்றும் திருப்பத்தூரில் இயங்கி வரும் சுகுமாா் ஸ்கேன் மையத்தின் தரகா் என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து, அப்போதைய திருப்பத்தூா் மாவட்ட இணை இயக்குநா் கொ.மாரிமுத்து திருப்பத்தூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சங்கரை கைது செய்தனா். இந்த வழக்கில் ஸ்கேன் மைய உரிமையாளா் சுகுமாா் (55), வேடியப்பன் (42), விஜய் (27),சிவா (36) உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னா், அவா்கள் வேலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா். கைது செய்யப்பட்டவா்கள் இதுபோன்று பலமுறை கருக்கலைப்பு வழக்கில் கைது செய்யப்பட்டனா் என்பதால், மாவட்ட எஸ்பி ஆல்பா்ட் ஜான் அவா்களை குண்டா் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியனுக்கு பரிந்துரைத்தாா்.
ஆட்சியரின் அளித்த உத்தரவின் பேரில் ஸ்கேன் மைய உரிமையாளா் சுகுமாா், சங்கா், சிவா ஆகியோா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu