ஆம்பூரில் தெரு விளக்குகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்
மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட தெரு விளக்கு.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்திற்கு எதிரே உள்ள முகமது புரா முதல் தெருவில் தனியாருக்கு சொந்தமான பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியின் எதிரே உள்ள உயர் மின் விளக்கும் அருகாமையில் உள்ள இரு மின் விளக்குகளையும் உடைத்துச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில், அருகாமையில் இருந்து மர்ம நபர்கள் சிலர் அடிக்கடி வந்து தொந்தரவு செய்வதாகவும், அவர்களை விரட்டும் பொழுது இதுபோன்ற செயல்களை செய்து விட்டு செல்வதாகவும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல் துறையினருக்கு அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாம்
திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 2023-2024 நிதியாண்டில் பல்வேறு வகையான அரசு நலத்திட்டங்கள் எளிதில் எவ்வித சிக்கல்கள் இன்றி மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைய ஏதுவாக பல்வேறு அரசுத்துறைகள் மற்றும் இதர நிறுவனங்களின் பங்களிப்புடன் மாற்றுத்திறனாளி களுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் வாணியம்பாடி வருவாய் உள் வட்டத்தில் இஸ்லாமியா கல்லூரி அருகில் அமைந்துள்ள அரசு நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் வருகிற 23-ந் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதாக சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு அனைத்துதுறை அலுவலர்களும் கலந்து கொள்ள இருப்பதால் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் புதியதாக தேசிய அடையாள அட்டை பெற விரும்பும் நபர்கள் அனைவரும் இச்சிறப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பள்ளி சமையலறையை கொள்ளையடித்த கும்பல்
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் தாலுகா மாதனூர் ஒன்றியம் கைலாசகிரி ஊராட்சி அரசு தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் தயார் செய்யும் சமையல் அறை உள்ளது. இங்கு இருந்து ஒரு கியாஸ் சிலிண்டர் 40 சாப்பாடு தட்டுகள் 50 டம்ளர்கள் மற்றும் அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை பொருட்களை மர்ம கும்பல் திருடி சென்றனர். இது குறித்து புகாரின் பேரில் உமாராபாத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu