ஜோலார்பேட்டையில் 2 வீடுகளில் கொள்ளையடித்த திருடன் கைது: 10 சவரன் நகை பறிமுதல்
ஜோலார்பேட்டையில் 2 வீடுகளில் கைவரிசை காட்டிய பலே திருடன் கைது 10 சவரன் நகை பறிமுதல்.
ஜோலார்பேட்டையில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் கொள்ளையடித்த திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மாதம் 6 இடங்களில் வழிப்பறி மற்றும் வீடுகளில் தொடர் கொள்ளை நடந்தது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்னர் இதுகுறித்து மாவட்ட எஸ்பி சிபி சக்கரவர்த்தி அவர்கள் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் நாற்றம்பள்ளி இன்ஸ்பெக்டர் அருண்குமார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி மற்றும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி ஆசிரியர் நகர் பஸ் நிறுத்தம் பகுதியில் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையை வைத்துக் கொண்டு சந்தேகத்தின் பெயரில் சுற்றித்திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
மேலும் போலீசாரிடம் இருந்து வாலிபர் தப்பிக்க முயன்று உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கர்நாடக மாநிலம், பெங்களூர், ஆனைக்கல் அடுத்த எடவனஹள்ளி பகுதி, வடரபாளையா, இம்ஜம் குரு பகுதியை சேர்ந்த கோவிந்தப்பன் என்பவரின் மகன் உதய்அலையாஸ், வினோத் அலையாஸ், மஜ்ஜூகான் (36) என்ற மூன்று பெயர்களை கொண்டவன் என்பது தெரியவந்தது. மேலும் வாலிபர் வைத்திருந்த பையில் இரும்பு ராடு உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது.
இது குறித்து மேலும் போலீசார் அந்த வாலிபரிடம் துருவித்துருவி விசாரணை மேற்கொண்டதில் கடந்த ஜூலை மாதம் திரியாலம் அடுத்த டி. வீரப்பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கடேசன், ரோஜா தம்பதியினர் வீட்டில் 5 சவரன் நகையும், கடந்த வாரம் பாச்சல் ஊராட்சி, பசுமை நகர் பகுதியை சேர்ந்த சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ஜலேந்திரன் என்பவர் வீட்டில் 5 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்ட உண்மை தெரியவந்தது.
மேலும் அந்த வாலிபர் கொள்ளையடிக்கும் பணத்தை ஏற்காடு உள்ளிட்ட பகுதிக்கு சென்று குளுகுளு அறையில் மது, மாது உடன் உல்லாசமாக இருப்பதும், இவர் மீது கர்நாடக மாநிலம் பெங்களூரில் 15 திருட்டு வழக்குகளும், தர்மபுரி மாவட்டத்தில் 7 வழக்குகளும் உள்ளன. மேலும் இவருக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வாலிபரை கைது செய்து அவரிடமிருந்து 10 சவரன் நகையை பறிமுதல் செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து மூன்று பெயர்களுடன் பல்வேறு பகுதிக்குச் சென்று தொடர் திருட்டில் ஈடுபட்டுவந்த பலே திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu