மலைகளுக்கு தொடர்ந்து தீ வைக்கும் மர்ம கும்பல்
ஏலகிரி மலையில் ஏற்பட்ட காட்டுத்தீ
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது. ஏலகிரி மலையில் 14 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவுக்கும் தமிழ் புலவர்கள் மற்றும் கொடை வள்ளல்கள் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது.
மேலும் எல்லா காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மாவட்டங்களில் இருந்தும் நாள்தோறும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் சுற்றுலாவிற்கு வரும் சிலர் புகைபிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விடுவதால் காய்ந்து கிடக்கும் சருகுகள் தீப்பிடித்து அரிய வகை மரங்கள் மூலிகைச் செடி கொடிகள் உள்ளிட்ட கரடி மான் முயல் மலைப் பாம்பு போன்ற உயிரினங்கள் தீயில் கருகி உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஏலகிரி மலைக்கு வந்த சுற்றுலா பயணிகள் சிலர், புகைப்பிடித்து தீயை காட்டுப்பகுதிக்குள் போட்டு விட்டுச் சென்றதால் சிறிய அளவில் பற்றிய தீ, மளமளவென 4வது வளைவில் இருந்து 9வது கொண்டை ஊசி வளைவுகள் வரை பற்றி எரிந்தது. இதனால் பல்வேறு அரிய வகை மரங்கள் மூலிகை செடி கொடிகள் காட்டுப் பகுதியில் வசிக்கும் உயிரினங்கள் போன்றவை தீயில் கருகியது.
இது குறித்து தகவல் அறிந்த ஏலகிரிமலை வனத்துறை வனக்காவலர்கள் பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் காட்டுத் தீயானது மளமளவென பரவி மலையில் மேல் பகுதிக்கு சென்றது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை.
மலைசாலைகளில் உள்ள மரங்களும் பற்றி எரிந்ததால் ஏலகிரி மலைக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் வாகன ஓட்டிகள் உள்ளிட்டோர் மேலிருந்து கீழும், கீழிருந்து மேலும் செல்லமுடியாமல் அனலின் தாக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகினர்.
வனத்துறையினர் காட்டுப் பகுதிக்குள் தீ வைத்த மர்ம கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் கடந்த ஒருவாரத்தில் மூன்றாவது முறையாக ஏலகிரிமலையில் தீ பற்றி எரிந்த சம்பவம் நடந்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu