ஜோலார்பேட்டை அருகே எரிந்த நிலையில் பெண் சடலம்; கூட்டு பலாத்காரமா என விசாரணை
எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை பார்வையிடும் பாேலீசார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த காவேரிபட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் கொட்டாறு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சுமார் (30 வயது) மதிக்கத்தக்க பெண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டார்.
பின்னர், வேலூரில் இருந்து தடவியல் நிபுணர் பாரி மற்றும் ஜேம்ஸ் அந்தோணி ராஜ் ஆகியோர் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. எரிந்து நிலையில் கிடந்த கால் மற்றும் கை ஆகியவற்றை கைபற்றி அவற்றை ஆய்வுக்காக தடயங்களை சேகரித்தனர்.
மேலும், இதுதொடர்பாக வேலூரிலிருந்து மோப்பநாய் சிம்பா வரவழைத்து சடலம் கைப்பற்றப்பட்ட இடத்தின் அருகாமையிலிருந்த ரத்த கரைகள் படிந்த புடவையை மோப்பம் பிடித்தது. மோப்பநாய் சிம்பா சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு ஓடிச்சென்று பெரிய கம்மியம்பட்டு பகுதியில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே நின்று விட்டது.
இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி உத்தரவின்பேரில், வாணியம்பாடி டிஎஸ்பி பழனி செல்வம், திருப்பத்தூர் டிஎஸ்பி சாந்தலிங்கம் மற்றும் ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் லட்சுமி ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்த கொடூர குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கண்டறிய தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத இந்த பெண் ஒருவேளை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu