ஜோலார்பேட்டை அருகே தொழில் அதிபரை கொலை செய்ய வந்த 5 பேர் கைது
ஜோலார்பேட்டையில் தொழிலதிபரை கொலை செய்ய முயன்றவர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி காலனி பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் அருள்மொழி (53). இவரும் சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த எஸ்.பி. ராமமூர்த்தி ஆகிய இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் கொசு மருந்து டெண்டர் எடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் பொது சுகாதார துறைக்கு வியாபாரம் செய்து வந்தனர்.
இந்நிலையில் இரண்டு ஆண்டு டெண்டர் முடிந்த நிலையில் மீண்டும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிதாக ஒப்பந்தம் நடைபெற்றது. அப்போது அருள்மொழி என்பவருக்கு டெண்டர் கிடைத்தது. இதனால் அருள் மொழிக்கும், ராமமூர்த்தி என்பவருக்கும் தொழில் ரீதியாக விரோதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ராமமூர்த்தி, அருள்மொழியை தொலைபேசி மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இந்தநிலையில் ராமமூர்த்தி எப்படியாவது அருள்மொழியை தீர்த்துக்கட்ட வேண்டும் என திட்டம் தீட்டினார் அதனைத் தொடர்ந்து நான்கு பேர் கொண்ட கூலிப்படையை ஏவிவிட்டார்
இந்நிலையில் நேற்று ஜோலார்பேட்டை பொன்னேரி காலனி பகுதிக்கு காரில் வந்த 4 பேர் அருள்மொழி வீட்டிற்கு எதிரே சென்று அரிவாளால் வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அருள்மொழி கத்தி கூச்சல் இடவே அங்கிருந்த பொதுமக்கள் 4 பேரை பிடித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் 4 பேரையும் கைது செய்து ஆயுதங்களைப் பறிமுதல் செய்தனர்.
மேலும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த ஜீவா (41), சின்ன திருப்பதி பகுதியை சேர்ந்த மதன்குமார் (42), இவரது சகோதரர் பிரபாகரன் (40) மற்றும் கார் டிரைவர் சேலம் நால்ரோடு பகுதியை சேர்ந்த கௌதம் (30) என்பதும் இவர்கள் தொழிலதிபரான அருள்மொழியை தீர்த்துக்கட்ட வந்த கூலிப்படையினர் என்பதும் தெரியவந்தது.
மேலும் கொலை செய்ய தூண்டுதலுக்கு காரணமான ராமமூர்த்தியை பிடிக்க ஜோலார்பேட்டை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் ஒரு தனி படையும், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் தலைமையில் ஒரு தனிப்படையும்அமைக்கப்பட்டது. போலீசார் சென்னையில் பதுங்கியிருந்த ராமமூர்த்தி பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
அதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் தொழில் ரீதியாக அதிக அளவில் தொல்லை இருந்ததாகவும் அதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்தேன் என வாக்குமூலம் அளித்தார். அதனைத் தொடர்ந்து ராமமூர்த்தி உட்பட கூலிப்படையை சேர்ந்த ஐந்து பேரும் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu