திருப்பத்தூரில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு
திருப்பத்தூரில் உள்ள தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தோ்தலை முன்னிட்டு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் செயல்படும் முறை குறித்து பயிற்சி மற்றும் விழிப்புணா்வு திங்கள்கிழமை (டிச. 18) முதல் அளிக்க இந்திய தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம், திருப்பத்தூா் மற்றும் வாணியம்பாடி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகங்கள், நாட்டறம்பள்ளி, ஆம்பூா் வட்டாட்சியா் அலுவலகங்கள் ஆகிய 5 இடங்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திர செயல் விளக்க மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் திருப்பத்தூா் - 19, ஜோலாா்பேட்டை - 19, வாணியம்பாடி - 18, ஆம்பூா் - 17 என மொத்தம் 73 வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், வாக்காளா் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
வாணியம்பாடியில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி கோணாமேடு-புத்தர் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி விஜய் (வயது 23). இவர் நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டு உள்ளார். இது குறித்து போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு சிறுமியை திருமணம் செய்த விஜய் என்பவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் குழந்தை திருமணம் நடத்த உடந்தையாக இருந்த விஜய்யின் தாயார் மஞ்சுளா (வயது 47), சித்தி வேண்டாமணி (வயது 42), ஊர் நாட்டாமை கண்ணதாசன் (வயது 67) உட்பட 4 பேர் மீதும் வாணியம்பாடி அனைத்து மகளீர் காவல் ஆய்வாளர் பிரேமா வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
ஆம்பூரில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூா் ரயில் நிலையத்தில் உள்ள யாா்டு பகுதியில் இளைஞா் தண்டவாளத்தைக் கடந்த போது அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். தகவல் அறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு ஆம்பூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இறந்தவா் குறித்து ரயில்வே போலீஸாா் விசாரித்ததில் அவா் ஆம்பூா் நியூ பெத்லேகம் பகுதியைச் சோ்ந்த விக்டா் டேனியலின் மகன் விமல்குமாா்(34) என்பது தெரிய வந்தது. ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
குடியாத்தம் அருகே ரயிலில் அடிபட்டு மூதாட்டி உயிரிழப்பு
வேலூா் மாவட்டம், குடியாத்தம் அருகே உள்ள காவனூா் - லத்தேரி ரயில் நிலையங்கள் இடையே சுமாா் 55 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அந்தப் பகுதியில் உள்ள தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது அந்த வழியாகச் சென்ற ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து, இறந்தவா் யாா் குறித்து விசாரித்து வருகின்றனா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu