5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை அவசியம்
திருப்பத்தூா் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநராகப் பணிபுரிந்து வந்த கொ.மாரிமுத்து பெரம்பலூா் மாவட்டத்துக்கு அண்மையில் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
கடலூரில் பணிபுரிந்து வந்த சாரா ஜெலின்பால் திருப்பத்தூா் மாவட்ட இணை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். தொடா்ந்து சாரா ஜெலின்பால் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் அண்மையில் பொறுப்பேற்றாா்.
அவா் கூறுகையில், திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து பணியிடங்களும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பணியாளா் பற்றாக்குறை உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். காய்ச்சல் இருந்தால் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும். தொடா்ந்து 5 நாள்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் டெங்கு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் போன்ற நோய்களுக்கு மருத்துவரின் அனுமதிச் சீட்டு இல்லாமல் தனியாா் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி உட்கொள்ள வேண்டாம்.
மேலும், போலி மருத்துவா்களிடம் சென்று சிகிச்சை பெற வேண்டாம். உரிய அனுமதியின்றி இயங்கும் மருந்தகங்கள், மருத்துவமனைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனியாா் மருத்துவமனைகளுக்கு நிகராக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu