திருவள்ளுவர் ஈரடுக்கு மேம்பாலத்தில் சுவர் இடிந்து விபத்து! பலியானவருக்கு இழப்பீடு?
திருநெல்வேலி சந்திப்பு மேம்பால சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் பராமாரிப்பு பணிகள் மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் 2.83 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வரும் ஒப்பந்ததாரர் எந்த வித பாதுகாப்பு ஏற்பாடுகளோ அல்லது பாதுகாப்பு வளையங்களோ ஏற்படுத்தாமல் திறந்த வெளியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் இதுபோன்ற பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்த பகுதியில் உள்ள மக்கள், வியாபாரிகள், அந்த வழியாக வரும் பயணிகளுக்கு தொந்தரவு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதை தெளிவாக அறிந்தும் இதுபோன்ற எந்தவித பாதுகாப்பு விசயங்களும் இன்றி அலட்சியமாக பணியாற்றி வந்துள்ளனர். இதனை கண்காணிக்க மாநகராட்சி அதிகாரிகளும் தவறியுள்ளனர். இதன் காரணமாக கடந்த 3ம் தேதி கொக்கிரகுளத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்ற முதியவர் அந்த வழியே செல்லும்போது அந்த சுவர் இடிந்து மேலே விழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த உயிரிழப்புக்கு காரணமான ஒப்பந்தகாரர், மாநகராட்சி அதிகாரிகள் மீது அலட்சியப்போக்கு, மரணத்தை உண்டாக்குதல் போன்ற பிரிவுகளில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவரது உறவினர்கள் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அலட்சியமாக நடந்துகொண்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உறவினர்களுடன் சேர்ந்து இந்த மனுவை திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் ஏராளமான நிர்வாகிகள் இந்த மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியர் கார்த்திகேயனிடம் கொடுத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu