வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.

வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.
X

தாதுமணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது

திருநெல்வேலி மாவட்டம் குட்டம் பகுதியிலிருந்து கோவை வழியாக வெளிமாநிலங்களுக்கு கடத்த முயன்ற தாதுமணல் லாரியுடன் பறிமுதல்.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்திலும் தாதுமணலான கார்னட் இலுமனைட் உள்ளிட்டவை பிரித்தெடுக்கப்பட்டு வெளிநாடு, வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. மத்திய அரசு தாது மணல் அள்ள தடை விதித்துள்ளதால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தாதுமணல் அள்ளபடவில்லை என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தாதுமணல் அள்ளி கடத்தப்படுவதாக குட்டம் அருகே உள்ள கிராமத்தினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மீனவர்களுக்கு தேவையான உதவிகளை சிறிய உதவிகளை செய்துவிட்டு தாது மணல் கடற்கரை பகுதியில் அள்ளப்பட்டு அதில் உள்ள தாதுக்கள் பிரித்தெடுக்கப்பட்டு ஏற்றுமதி தொடர்ந்து நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அரசின் சார்பில் ஆய்வுகள் நடத்தி மணல் அள்ளபடவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் திருநெல்வேலி, மதுரை நான்கு வழி சாலை கேடிசி நகர் பகுதியில் கோவையை சேர்ந்த டாரஸ் லாரியை காவல்துறையின் சிறப்புப் பிரிவினர் நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட இலுமனைட் தாதுமணல் 10 கிலோ பைகளில் அடைக்கப்பட்டு 25 டன் அளவில் கொண்டு செல்லப்படுவது தெரியவந்தது.

திசையன்விளையை அடுத்த குட்டம் பகுதியில் இருந்து கோவைக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அங்கிருந்து வெளி மாநிலங்கள் மூலமாக வெளிநாடுகளுக்கு கடத்த உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஒரு டன் தாது மணல் இருபது லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என்ற நிலையில் 25 டன் தாது மணலின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள லாரியில் இருக்கும் மணலை கனிம வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி