பாஜக பிரமுகர் மீது தாக்குதல்: முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தர்ணா
திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் தாக்கப்பட்டதைக்கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
நெல்லை மாவட்டம் பணகுடி அருகே பாஜக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக நெல்லை எம்.பி. மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக்கோரி இரவு நேரத்தில் நெல்லை சந்திப்பு பாரதியார் சிலை முன்பு பாஜகவினருடன் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திடீரென தொடர் தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு.
நெல்லை மாவட்டம், பணகுடி அடுத்த ஆவரைகுளம் பகுதியில் உள்ள உணவகத்தில் பாஜக பிரமுகர் பாஸ்கரன் என்பவர் உணவருந்திக் கொண்டிருந்த போது நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞான திரவியம் மற்றும் அவரது மகன் உட்பட 30 பேர் சேர்ந்து சரமாரியாக தாக்குதல் நடத்தியதாக கூறி, அவரைகுளத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவர் நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஸ்கரனின் புகார் அடிப்படையில், நெல்லை மாவட்டம் பணகுடி காவல் நிலையத்தில் நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் உட்பட 30 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அடிதடி சம்பவத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாஜக பிரமுகர் பாஸ்கரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூற வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், சிகிச்சைகள் குறித்தும், சம்பவம் தொடர்பாக பதியப்பட்ட வழக்கு குறித்தும் பாரதிய ஜனதா கட்சியினரிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, பாஜகவினர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என கோரி, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். எந்த முடிவும் கிடைக்கப் பெறாத நிலையில், நெல்லை சந்திப்பில் உள்ள பாரதியார் சிலை முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர் மகாராஜன் உட்பட 30க்கும் மேற்பட்டோர் நெல்லை எம்.பி. மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யும் வரை தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட தொடங்கினார்.
இந்த தகவல் அறிந்த, பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாரதியார் சிலை முன்பு திரண்டனர். இதனை அறிந்த நெல்லை மாநகர காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் பாஜக தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் பேச்சுவார்த்தை நடத்தினர். கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யும் வரை இங்கிருந்து செல்லப் போவதில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த, மாநகர காவல்துறை துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் பொன் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வி அடையவே தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட பொன் ராதாகிருஷ்ணன் உட்பட பாஜகவினரை கைது செய்யும்படி மாநகர துணை ஆணையாளர் டிபி சுரேஷ்குமார் உத்தரவை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து பொன் ராதாகிருஷ்ணன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு நெல்லை சந்திப்பு பாலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யக் கோரி, முன்னாள் மத்திய அமைச்சர் உட்பட பாரதிய ஜனதா கட்சியினர் இரவு நேரத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. தொடர் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்த நிலையில், மீண்டும் யாரும் பாரதியார் சிலை முன்பு ஒன்று சேராத வகையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu