நெல்லை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் பிரிவில் கூடுதல் அறைகள்
நெல்லை அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 120 கூடுதல் படுக்கைகள் அமையவுள்ளது
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இன்னும் ஓரிரு மாதத்தில் மூன்றாம் அலை பரவ தொடங்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக மூன்றாம் அலையில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள்.என்று எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து மூன்றாம் அலையை சமாளிக்க தமிழ்நாடு சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா மூன்றாம் அலையை சமாளிக்கும் வகையில், அரசு தலைமை மருத்துவமனையின் குழந்தைகள் மருத்துவ பிரிவில் கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணிகள் தற்போது மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது.
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தான் பிரதான அரசு கொரோனா சிகிச்சை மையமாக உள்ளது. இங்கு மொத்தம் சுமார் 1,200 படுக்கைகள் உள்ளன. இதில் குழந்தைகள் மருத்துவ பிரிவில் மட்டும் மொத்தம் 120 படுக்கைகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் மூன்றாம் அலையின்போது குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்று கூறப்படுவதால் கூடுதல் படுக்கைகளை அமைக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவுறுத்தியிருந்தார்.
அதன்படி தற்போது திருநெல்வேலி அரசு மருத்துவனையில் குழந்தைகள் மருத்துவ பிரிவில் உள்ள படுக்கைகள் எண்ணிக்கையை இரு மடங்காக உயர்த்த மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஏற்கனவே உள்ள 120 படுக்கைகளுடன் தற்போது கூடுதலாக 120 புதிய படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குழந்தைகள் மருத்துவ பிரிவின் முதல் தளத்தில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வார்டுகள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு மின் இணைப்பு வயர்கள் புதிதாக மாற்றப்பட்டு வருகிறது.
மேலும் ஏற்கனவே இருந்த வார்டில் சில படுக்கைகளில் மட்டுமே ஆக்சிஜன் வசதி இருந்தது. ஆனால் தற்போது அனைத்து படுக்கைகளிலும் ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக புதிய வெண்டிலட்டர் இணைப்புகளை அமைக்கும் பணி மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி பிளான்ட்டில் இருந்து ஆக்சிஜனை கொண்டுவரும் இரும்பு குழாய்களை புதிதாக அமைத்தல், வெண்டிலேட்டர் இணைப்புக்கான மின்சாதனங்கள் பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்தப் புதிய வார்டில் மொத்தம் 120 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன.
மூன்றாம் அலை பாதிப்பு மிக வேகமாக இருக்கும் பட்சத்தில் இங்கு சிகிச்சைக்கு வரும் குழந்தைகளுக்கு எந்த வகையிலும் சிகிச்சை பாதிக்கப்படாத வகையில் மின் இணைப்புகள் முதல் ஆக்சிஜன் குழாய்கள், மின் விளக்குகள் என அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரவிச்சந்திரன் கூறும்போது, "கொரோனா இரண்டாம் அலை பாதிப்பை அனைத்து மருத்துவர்கள் மற்றும் அலுவலர்களின் ஒத்துழைப்போடு சமாளித்தோம். அடுத்த கட்டமாக மூன்றாம் அலை ஏற்படும் போது குழந்தைகள் பெருமளவு பாதிக்கப்படலாம் என்று கூறுகின்றனர். எனவே அதற்கேற்ப குழந்தைகள் மருத்துவ பிரிவில் கூடுதலாக 120 படுக்ககளை அமைத்து வருகிறோம். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட கொரோனா தொற்று சிகிச்சை நிதியிலிருந்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் படுக்கைகள் அமைக்கப்படும் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu