நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணியில் 90 சமூக ஆர்வலர்கள்

நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணியில் 90 சமூக ஆர்வலர்கள்

பைல் படம்.

நெல்லை, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.

நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் நீராதாரமாக திகழ்ந்து வரும் தாமிரபரணி நதியின் மூலம் பயன்பெறும் பாசன குளங்களில் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி ஆண்டுதோறும் நடந்து வருகிறது.

அகத்திய மலை சமூகம் சார்ந்த சூழலியல் அமைப்பு, வனத்துறை மற்றும் நம் தாமிரபரணி இயக்கம் சார்பில் நெல்லை, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டத்தில் தாமிரபரணி நதி கால் பாசன குளங்களில் வசிக்கும் பறவைகள் கணக்கெடுப்பு இன்று முதல் தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது. 12 வது தாமிரபரணி நீர் வாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியில் தன்னார்வலர்கள், பறவை ஆர்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் என மொத்தம் 90 பேர் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள் 10 குழுக்களாக பிரிந்து பறவைகளை இனம் மற்றும் ரகம் வாரியாக அவைகளை நேரில் காண்பது, அவற்றின் எச்சம் , கால்தடம் , கூடுகள், ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கெடுத்து வருகின்றனர். அந்த வகையில் நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள வேய்ந்தன் குளத்தில் பறவைகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கப்பட்டு பறவைகள் தொலைநோக்கி உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டது.

தொடர்ந்து கங்கைகொண்டான் பெரிய குளம் , ராஜவல்லிபுரம் குளம் , நயினார்குளம் மானூர் பெரியகுளம், அரியநாயகிபுரம் குளம், திருப்புடைமருதூர் உள்ளிட்ட நெல்லை மாவட்டங்களில் 14 குளங்களில் இன்றும், தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நாளையும் இந்த கணக்கெடுப்பு பணி தொடர்கிறது.

இதுகுறித்து தாமிரபரணி நீர் வாழ் கணக்கெடுப்பு ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அதிக அளவில் பெய்துள்ளதால் தாமிரபரணி ஆற்றுப்படுகையை ஒட்டிய பெரும்பாலன குளங்கள் நிரம்பி உள்ளன.

கடந்த ஆண்டு கணக்கெடுப்பைவிட இந்த ஆண்டு குளங்கள் பெரும்பாலும் பெருகி உள்ளதால் பறவைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதில் குறிப்பாக நாமக்கோழி, மூக்கன் தாரா, சிவப்பு ஆள்காட்டிக் குருவி, ஜம்பு நாரை, கூழைக்கடா, பவளக்கால் உள்ளான் ஆகிய 36 வகை பறவைகள் தாமிரபரணி பாசன குளங்களில் கண்டறியப்பட்டுள்ளதாகவும், 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து குளங்களிலும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் பறவைகள் ஓரிடம் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுவதால் கூட்டமாக காணப்படுவது குறைவு எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Next Story