பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞர் உட்பட 3 பேர் கைது

பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞர் உட்பட 3 பேர் கைது
X

6 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞருடன் கைதான 2 பேர்.

நெல்லையில் இளம் பெண்களை ஏமாற்றி 6 திருமணம் செய்த இளைஞர் மற்றும் திருமணத்திற்கு உதவிய இரண்டு பெண்களையும் மகளிர் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை என்.ஜீ.ஓ பி காலணி உதயாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன் என்ற ஜோசப்ராஜ். இவரது மகள் விஜிலாராணி. இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் பாஸ்கர் என்பவருக்கும் கொரோனா ஊரடங்கு காலமான 2020 ஜூலை 15-ந்தேதி திருமண புரோக்கர் இன்பராஜ் ஏற்பாட்டில் திருமணம் நடந்துள்ளது.

திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 40 பவுன் தங்க நகையும், 3 லட்சம் ரூபாய் ரொக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்த சில மாதங்களில் நகையை விற்று மோசடி செய்துள்ளார். இதுகுறித்து கேட்ட போது மனைவி விஜிலாராணியுடன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விஜிலாராணி தனது தந்தையிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். உடனடியாக தந்தை கணேசன் பாளையங்கோட்டையில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், வின்சென்ட் பாஸ்கர் ஏற்கனவே பல இளம் பெண்களை ஏமாற்றி 5 முறை திருமணம் ஆனவர் என்றும், அதே போன்று விஜிலா ராணியையும் திருமணம் செய்துள்ளது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு வின்சென்ட் பாஸ்கரை தேடி வந்த நிலையில் போலீசார் திசையன்விளை அருகில் உள்ள சுவிசேசபுரத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சுவிசேசபுரம் பகுதியைச் சேர்ந்த பிளாரன்ஸ் என்ற பெண் தனக்கு தாயாகவும் , தாமரைச் செல்வி என்ற பெண் சித்தியாகவும் நடிக்க வைத்து புரோக்கர் கூறும் இடத்தில் பெண்களைப் பார்த்து அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து வின்சென்ட் பாஸ்கர், மற்றும் பிளாரன்ஸ், தாமரைச்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள திருமணப் புரோக்கர் இன்பராஜை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். 6 இளம் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்ட இளைஞர் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!