நெல்லை:தனியார் இடுகாட்டில் மின்மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிப்பு
தனியார் இடுகாட்டில் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 50க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் குறிப்பிட்ட இந்து சமுதாயத்திற்கு சொந்தமான தனியார் மயானம் அமைந்துள்ளது. இந்த சூழ்நிலையில், இந்த மயானம் அமைந்துள்ள இடத்தில் நெல்லை மாநகராட்சி சார்பில் மின் மயானம் அமைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இடத்தில் தங்களது சமுதாய முறைப்படி இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுடன் உடல்கள் எரியூட்டி வருவதால், அதற்கு இடையூறாக இங்கு மின்மயானம் அமைக்க கூடாது என அந்த இடத்திற்கு சொந்தமான சமுதாயத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அந்த சமூகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இன்று நெல்லை மாநகராட்சி ஆணையர் விஷ்ணு சந்திரனிடம் நேரில் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் எதிர்கால நலன் கருதி தங்கள் முன்னோர்கள் போதிய இட வசதியுடன் ஒரே நேரத்தில், பல்வேறு சடலங்களை எரியூட்டும் வகையிலும் இறுதிச் சடங்குகள் செய்யும் வகையிலும், இந்த மயானத்தை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அங்கு ஆய்வு செய்து இருப்பது கவலை அளிக்கிறது. எனவே, அந்த இடத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல், மயானத்தை நாங்களே பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu