திருநெல்வேலி எம்.பி மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு

திருநெல்வேலி எம்.பி மத்திய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை மனு
X
திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து கூடுதல் ரயில்களை இயக்கக் கோரிக்கை மனு

திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் சா.ஞானதிரவியம் டெல்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை சந்தித்து தென்பகுதிகளுக்கு பல ரயில்களை இயக்கக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

டெல்லியில் ஒன்றிய ரயில்வே அமைச்சர் மாண்புமிகு அஸ்வினி வைஷ்ணவ் -ஐ சந்தித்து கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட கேட்டுக் கொண்டுள்ளார். அந்த மனுவில்

1. தற்போது நாகர்கோவில்-தாம்பரம் ரயில் வாரம் மும்முறை இயங்கி வருகின்றது. நாகர்கோவில்-திருநெல்வேலி-மதுரை-சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் காத்திருப்போர் பட்டியலுடன் முழு அளவில் பயணிகள் ஏற்றிச் செல்வதுடன் அதிக அளவில் வருவாய் கிடைத்து வருகிறது. இதனால் இந்த தடத்தில் பல்வேறு பெயர்களில் அதிக கட்டணத்தில் சிறப்பு ரயில்களை இயக்கி அதிக வருவாயை ஈட்டி வருகின்றது. வேறு ரயில்கள் இல்லாத காரணத்தால் பயணிகள் அதிக கட்டணத்துடன் சிறப்பு ரயில்களில் பயணம் செய்கின்றனர். தென்மாவட்ட பயணிகள் அதிக அளவில் நிரந்திர தினசரி ரயில் வசதியை எதிர்பார்க்கிறார்கள். 22657/22658 நாகர்கோவில்-தாம்பரம் மற்றும் 12689/12690 ஆகிய இரண்டு ரயில்களும் தினசரி ரயில்களாக இயக்கும் திட்டம் தெற்கு ரயில்வேயால் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பபட்டு திட்டம் கிடப்பில் உள்ளது. எனவே ரயில்வே வாரியம் இந்த இரண்டு ரயில்களையும் தினசரி ரயில்களாக இயக்க உடனே நிறைவேற்றக் கேட்டுக் கொள்கிறேன்.

2. சேரன்மகாதேவி, அம்பாமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், ஆகிய பகுதிகளிலிருந்து சென்னைக்கு நேரடி ரயில் வசதி தற்போது இல்லை. எனது கோரிக்கையை ஏற்று திருநெல்வேலி-தாம்பரம்- வழி சேரன்மகாதேவி, அம்பாமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி வழியாக வாரம் ஒருமுறை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்திலும் இயங்கும் சிறப்பு ரயிலால் அதிக வருவாய் கிடைத்து வருகின்றது. எனவே மேற்கண்ட ரயிலுக்கு 'தாமிரபரணி எக்ஸ்பிரஸ்" என பெயர் சூட்டி இந்த தடத்தில் நிரந்தர ரயிலாக இயக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

3. கன்னியாகுமரியிலிருந்து இருந்து மும்பை சென்று கொண்டிருந்த வண்டி எண்.16381/16382 ரயில் பூனே வரைதான் இயக்கப்பட்டு வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து மும்பை செல்லும் பயணிகள் இதனால்; மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். தடம் எண்.16345/16346 லோக்யமான்யதிலக்-திருவனந்தபுரம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது திருவனந்தபுரம் வரை இயக்கப்படுகிறது. இந்த ரயிலை திருநெல்வேலி வரை இயக்க வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு ரத்து செய்யப்பட்ட மும்பை ரயிலுக்கு பதில் தடம் எண்.16345/16346 லோக்யமான்யதிலக்-திருவனந்தபுரம் நேத்ராவதி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் டவுண் வழியாக திருநெல்வேலி வரை நீட்டிக்க வேண்டும்.

4. அதே போல் தற்போது சென்னையிலிருந்து ஹைதராபாத்திலிருந்து தினசரி மூன்று ரயில்கள்; இயக்கப்படுகிறது. தென்மாவட்டங்களிலிருந்து ஹைதராபாத்துக்கு தினசரி ரயில்சேவை தற்போது இல்லை. ஆகவே மேற்கண்ட 3 ரயில்களில் ஏதாவது ஒன்றினை திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும். இவ்வாறு இயக்குவதால் தென்தமிழ்நாட்டில் சுமார் 15 மாவட்ட மக்கள் பயன்பெறுவர். தென்மத்திய ரயில்வே மண்டலம் சார்பாக எண்.12759/12760 சார்மினார் அதி வேக ரயிலை மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி வரை திட்டம் இருப்பதாகவும் இந்த நீட்டிப்புக்கு தெற்கு ரயில்வே முட்டுகட்டை போட்டு வருவதாக அறிய வருகிறேன். அந்த அதிவேக சார்மினார் ரயிலான 12759/12760 ரயிலை சென்னையிலிருந்து விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரிக்கு நீட்டிப்பு செய்து இயக்கிட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

5. மேலும் தடம் எண்.16791/16792 திருநெல்வேலி- பாலக்காடு பாலருவி விரைவு ரயிலுக்கு கோவிட் பெருந்தொற்றுக்கு முன் கீழக்கடையம் மற்றும் பாவூர் சத்திரம் ரயில் நிலையங்களில் நிறுத்தம் இருந்தது. தற்போது கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு மேற்கண்ட பகுதிகளில் நிறுத்தம் அளிக்கப்படாமல் இயங்கி வருகின்றது. இந்த பாலருவி விரைவு ரயிலுக்கு கீழக்கடையம் மற்றும் பாவூர் சத்திரம் ரயில் நிலையங்களில் இருமார்க்கங்களிலும் நிரந்தர நிறுத்தம் மீண்டும் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

6. கோவிட் பெருந்தொற்றுக்கு முன் திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் தினம் 6 முறைகளும், திருநெல்வேலி –செங்கோட்டை பயணிகள் ரயில் தினம் 4 முறைகளும், திருநெல்வேலி-தூத்துக்குடி பயணிகள் ரயில் தினமும் 2 முறையும் இயக்கப்பட்டு வந்தன. அவைகளை மீண்டும் அதே போல் இயக்கிடவேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேலும் திருநெல்வேலி – நாகர்கோவில், நாகர்கோவில் - திருவனந்தபுரம் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி – திருவனந்தபுரம் என்றும், திருநெல்வேலி – செங்கோட்டை, செங்கோட்டை – கொல்லம் என இரண்டு தடங்களில் தனித்தனியாக இயங்கும் பயணிகள் ரயில்களை இணைத்து ஒரே ரயிலாக திருநெல்வேலி – கொல்லம் என ஒருங்கிணைத்து ரயில் இயக்கிடவும் நான் வலுவாக தங்களிடம் கோரிக்கை வைக்கிறேன்.

எனவே, ரயில்வே அமைச்சரிடம் மேற்கண்ட ரயில்களை இயக்கும் வகைக்கு ஒரு உறுதியான நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன். என்று திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் .சா.ஞான திரவியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags

Next Story