நெல்லையில் கொட்டித்தீர்த்த கனமழை! விடிய விடிய குளிர்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை முதல் இரவு வரை கொட்டித் தீர்த்த கனமழையால் நெல்லையில் மக்கள் மிகுந்த அவதியுற்றனர்.
கடந்த மாதம் மிகக் கடுமையான வெயிலை தமிழகம் சந்தித்து வந்தது. 100 டிகிரியையும் தாண்டி 107 டிகிரி வரைக்கும் வெயில் கொளுத்தி எடுத்தது. இதனால் நடைபாதை வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் உட்பட பலர் மிகவும் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வெளியில் வெயிலில் நின்று, அலைந்து செல்ல வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறார்கள். இதனால் இந்த கடுமையான வெயிலைச் சமாளிப்பதற்கு வெள்ளரி, எலுமிச்சை நீர் போன்றவற்றையும் அதிகம் விற்று வந்தனர். இளநீர், பதநீர் விலை அதிகரித்து விற்கப்பட்டதால் குறைந்த அளவே மக்கள் அதனை நாடினர்.
இந்நிலையில் கடந்த வாரம் கோடை மழை ஆரம்பித்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பரவலாக இருந்தது. கரூர் மாவட்டத்திலும் பலத்த மழை, மிதமான மழை என பதிவாகியிருந்தது.
தென்னிந்திய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அநேக இடங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
காலை, மதிய நேரங்களில் வெயில் கொளுத்துவதும் மாலை நேரங்களில் மழை வெளுப்பதுமாக கடந்த இரு நாட்களாக வாடிக்கையாக இருக்கிறது. நேற்றும் இப்படித்தான் மதியம் வரை வெயில் பின்னி பெடலெடுத்த நிலையில், மாலை நேரம் குளிர்ந்த காற்று வீசி, லேசான தூரல்களுடன் மழைத் துவங்கியது. இரவு 6 மணி தாண்டியதும் மழைக்கான அறிகுறி மேலும் அதிகரித்து, இடிகள் முழங்க மின்னல்கள் வெட்ட ஜோராக மழை பொழிந்தது. இதனால் கான்கிரீட் காடுகளே ஆசுவாசப்படுத்திக் கொண்டன என்று சொல்லும் வகையில் ஊரெங்கும் குளிர்ச்சியைத் தந்துவிட்டு சென்றது மழை. திருநெல்வேலி நகரில் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பரவலாக இருந்தது.
மாநகராட்சி பகுதிகளில் மதியம் வெயில் தாழ்ந்து மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. நேற்று மாலை 5 மணி அளவில் தூறலுடன் ஆரம்பித்த மழை, இரவு வரை தொடர்ந்து பெய்தவாறு இருந்தது.
நேற்று காலை வழக்கமான வெயிலின் தாக்கம் ஆரம்பித்தது. மாலை வேளைகளில் மழை பெய்து வந்ததால் அந்த அளவுக்கு வெப்பம் இல்லை. மதியம் 1 மணிக்கு மேல் திடீரென கருமேகங்கள் சூழ மாநகரின் பல இடங்களிலும் குளிர்ந்த காற்று வீசியது. ஆங்காங்கே இடி முழக்கம் கேட்கத் துவங்கியது. அதனுடன் மின்னலும், மழையும் சேர்ந்தே வந்தது.
பாளையங்கோட்டை, நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், சமாதானபுரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
1 மணி நேரம் கனமழையும், அடுத்து அவ்வப்போது தூறலும் போட்டுக்கொண்டே இருந்தது. சாலையில் தேங்கிய மழைநீர் வடியாமல் சாலைகளை அடைத்திருந்த நிலையில், மின்சாரமும் தடை பட்டது. நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் மழை நீர் மணிக்கணக்கில் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu