நெல்லை பாளையங்கோட்டை மரக் கடையில் பயங்கர தீ விபத்து

நெல்லை பாளையங்கோட்டை மரக் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான மரக்கட்டைகள் எரிந்து நாசம் ஆயின.

நெல்லை மாநகரப் பகுதிக்கு உட்பட்ட பாளையங்கோட்டை மார்க்கெட் பகுதியில் மாதா சாமில் டிம்பர் டிப்போ மரக் கடை உள்ளது. இதன் உரிமையாளர் மரிய பாஸ்கர். இந்த மரக்கடையில் இன்று காலையில் திடீரென தீ பிடித்தது. இந்த தீ மளமளவென அங்கு உள்ள மரக்கடை முழுவதுமே எரிந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை தீயணைப்பு படை நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத காரணத்தினால் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை மற்றும் பேட்டை ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து சுமார் மூன்று வாகனங்களை கொண்டு தீ அணைக்கும் பணியில் தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மர தடிகள் மற்றும் இழைப்பு இயந்திரம் சேதம் அடைந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவால் தீ ஏற்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!