நெல்லையில் பாரம்பரிய சரிவிகித உணவு திருவிழா கண்காட்சி
பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற பாரம்பரிய மற்றும் சரிவிகித உணவுத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, அப்துல்வகாப் எம்எல்ஏ ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்தனர்.
நெல்லையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய சரிவிகித உணவுத் திருவிழா நடைபெற்றது. இதில் நவதானிய உணவு வகைகள் உள்பட 20 க்கும் மேற்பட்ட உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. மேலும் இந்த விழாவில் தமிழகத்திலேயே முதல் முறையாக சரிவிகித உணவு வளாகம் என்பதற்கான சான்று நெல்லை அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் சரிவிகித உணவு இயக்கம் சார்பில் சத்தான உணவு குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாரம்பரிய மற்றும் சரிவிகித உணவுத் திருவிழா பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம் அருகே நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல்வகாப் ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து பாரம்பரிய உணவு வகைகளை அரங்கு வாரியாக சென்று பார்வையிட்டனர். இந்த கண்காட்சியில் நவதானியங்களால் செய்யப்பட்ட திணை முறுக்கு, திணை லட்டு , கம்பு உப்புமா, சோளப் பனியாரம், ராகி பக்கோடா உள்ளிட்ட 20 வகைகளுக்கும் மேலான பாரம்பரிய உணவு காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனையும் செய்யப்பட்டது.
மேலும் கண்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள் ஒவ்வொன்றும் எப்படி செய்ய வேண்டும் என்பது குறித்தும் செய்முறை விளக்கங்களும் வைக்கப்பட்டிருந்தது. மலைவாழ் மக்களான காணியின மக்கள் உற்பத்தி செய்யும் கிழங்கு வகைகள், தேன், அத்திபழம், கொட்டாம்புளி, மிளகு, ஆகியவையும், இயற்கை உரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறிகள், பாரம்பரிய நெல்விதைகள் ஆகியவையும் பார்வைக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பாரம்பரிய உணவு செயல்முறை குறித்து தொடங்கப்பட்டுள்ள யூடியூப் சேனல் சேவையை தொடங்கி வைத்ததுடன் , கல்லூரிகள் , பள்ளிகளில் சரிவிகித உணவு மன்றம் என்ற அமைப்பையும் தொடங்கி வைத்தார். மேலும் விழாவில் தமிழகத்திலேயே முதன் முறையாக சரிவிகித உணவு வளாகம் என்ற சான்று நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. இதனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மருத்துவர் ரவிச்சந்திரன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் ஆட்சியர் விஷ்ணு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
பாரம்பரிய உணவுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. தமிழகத்திலேயே முதன் முறையாக நெல்லை மருத்துவக்கல்லூரி சரிவிகித உணவு வளாகம் என்ற சான்றை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் உணவு பரிசோதனை வாகனம் தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரையில் மட்டும் தான் இயங்குகிறது. அந்த வாகனம் இன்று நெல்லைக்கு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்த கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு சென்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu